பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப்... பிரதமர் மோடி வாழ்த்து...
பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஷ் ஷெரீஃப் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஷ் ஷெரீஃப்-க்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. 265 இடங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை. இந்நிலையில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி (PTI) தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட்டனர். இதில், 93 இடங்களில் PTI கட்சியினர் வெற்றி பெற்றனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சி 75 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி கட்சி 54 இடங்களிலும், எம்.க்யூ.எம்(பி) கட்சி 17 இடங்களிலும் வெற்றிபெற்றன.
எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கூட்டணி ஆட்சியின் பிரதமராக ஷெபாஷ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 3) நடைபெற்றது. இதில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நேற்று அதிபர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஷெபாஷ் ஷெரீஃபுக்கு அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிலையில் , பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஷ் ஷெரீஃபுக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?