"5 வருஷமா கரண்ட் இல்ல..மூச்சு விட சிரமமாக இருக்கு"... திருவாரூரில் கொந்தளித்த பொதுமக்கள்
திருவாரூர் அருகே மின்வாரியத்தைக் கண்டித்து துணை மின் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் அம்பல் பகுதியில் ஆதாயத்தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக ஆதாயத்தெரு பகுதியில் முறையாக மின்சாரம் வழங்கப்படவில்லை எனவும் குறைவான மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் கொடுப்பதால் பல மின்சாதன பொருட்கள் பழுதடைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்த அப்பகுதி மக்கள், பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். ஆனால், அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பூந்தோட்டம் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள், வெயில் காலத்தில் முறையான மின்சாரம் கிடைக்காததால் வீட்டிற்குள் மூச்சு கூட விட முடியவில்லை என வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கத்தரி வெயில் சுட்டெரித்து வரும் சூழலில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் மின்சாரத்துறை கூடுதல் கவனம் செலுத்தி கோடை காலத்தில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
What's Your Reaction?