பறக்கும் படை அதிரடி.. ரூ 460 கோடி பணம், போதை பொருட்கள் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை 460 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், நகை மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரைக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆங்காங்கே அரசியல் கட்சித்தலைவர்களின் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேரிடம் இருந்து ரூ.4 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அவர்களை தாம்பரத்தில் பறக்கும் படையினர் பிடித்தனர். சரியான ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடமிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே போன்று, இரண்டு நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள காங்குப்பத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்திடமிருந்து கணக்கில் வராத ரூ.7 லட்சம் பணத்தை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊரான காங்குப்பத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் சிதறிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுகளையும், வீட்டினுள் இருந்த ரூ.5 லட்சத்துக்கும் மேலான தொகையும் பிடிப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை 460 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், நகை மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தை சேர்ந்த 71 ஆயிரம் ராணுவ வீரர்கள் தபால் மூலமாக வாக்களிக்க உள்ளனர். ராணுவ வீரர்கள் அனைவரும் ஜூன் 4ம்தேதி காலை 8 மணிக்கு முன் தங்களின் வாக்கு சீட்டுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வந்து சேருமாறு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் உள்ள உதவி அலுவலரிடம் தங்களது வரிசை எண் தொடர்பான தகவல்களை கேட்டு தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 18ம் தேதி முதல் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளோம். வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் வீடியோ கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவ படையினர் வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவர் கோரிக்கை வைத்த நிலையில் அதுகுறித்து பரிசீலனையை இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய உள்ளது.
தமிழகத்தில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினரால் காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனத்தின் பெயர் அடங்கிய பெட்டியில் 1400 கிலோ தங்கம் எடுத்து செல்லப்பட்டதை பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி முதல்கட்ட தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
தமிழ்நாட்டில் 293 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 53 கோடி அளவுக்கு ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
5 லட்சம் லிட்டர் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.952 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்களும், 2021 சட்டமன்ற தேர்தலில் ரூ.466 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
What's Your Reaction?