மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி விதிமீறல்.. 10 வருசமா தூங்கிட்டு இருக்கீங்களா..! அதிகாரிகளை விளாசிய நீதிமன்றம்..!
மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், நடவடிக்கை எடுக்காமல் 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 1997-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, கோவிலின் சுவரில் இருந்து கோயிலைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் உயர வரம்பாக 9 மீட்டராக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், விதியை மீறி நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் நீண்ட தூரத்தில் இருந்து கோவில் கோபுரங்களை பார்க்க முடியாததால், பக்தர்களின் உணர்வுகள் பாதிக்கப்படுவதாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கடந்த 2011-ஆம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மீனாட்சியம்மன் கோவிலைச்சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர்களை நியமித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், மொத்தம் 547 கட்டடங்களை ஆய்வு செய்ததில் 525 கட்டடங்கள் 9 மீட்டருக்கும் மேல் கட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து. இந்த வழக்கு இன்று (பிப்.26) தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபூர்வாலா மற்றும் இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் அரசாணையை மீறி மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிடப்பட்டது.
அப்போது ஆஜரான மதுரை மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், கோவிலை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் 9 மீட்டருக்கு மேல் கட்டிடங்கள் கட்டிய உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட உள்ளது. விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டு இருப்பது உறுதியானால் எவ்வித பாகுபாடும் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அனுமதியற்ற கட்டுமானங்களை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், அனுமதியற்ற விதிமீறல் கட்டிடங்களை கட்ட அனுமதி கொடுத்துவிட்டு 10 ஆண்டுகளாக ஆழ்ந்த தூக்கத்தில் அதிகாரிகள் இருந்தனரா? விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பணிகளில் ஒன்று என்று கூறிய நீதிபதி, வெறும் நோட்டீசை மட்டும் அனுப்பிவிட்டு எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். 1997க்கு பிறகு உள்ளூர் திட்ட குழுமம் கட்டிடங்கள் கட்ட கொடுத்த அனுமதி எத்தனை? தற்போது வரை விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விரிவான அறிக்கையை ஏப்ரல் 4ம் தேதிக்குள் சமர்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
What's Your Reaction?