காசு தரலனா ஜெயில் தான்.. ஆடிட்டரை மிரட்டி 1 கோடி சுருட்டிய காவல் ஆய்வாளர் கைது! 

கும்பகோணத்தை சேர்ந்த ஆடிட்டரிடம் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டி ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற தர்மபுரி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் நெப்போலியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Apr 4, 2025 - 17:17
காசு தரலனா ஜெயில் தான்.. ஆடிட்டரை மிரட்டி 1 கோடி சுருட்டிய காவல் ஆய்வாளர் கைது! 
police inspector arrested for blackmailing auditor

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர்  அவருக்கு சொந்தமான குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 சென்ட் நிலத்தை அவருடைய மருமகன் வெங்கடேஷ் என்பவருக்கு 2020-ம் வருடம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தினை நீர்வளத்துறை (WRD), கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்காக கையகப்படுத்தி அதற்கு இழப்பீடாக ரூ.54,00,000/- வழங்கியுள்ளது.

சட்ட விரோதமாக தேக்கு மரத்தை வெட்டிய ஆடிட்டர்:

பின்னர் ரவிச்சந்திரன், நீர்வளத்துறையால் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்த சுமார் 30 தேக்கு மரங்களை யாருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக வெட்டியுள்ளார். 

இதனை அறிந்த தர்மபுரி மாவட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவில் (IUCAW-Investigative Units for Crime against Women) பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் நெப்போலியன் என்பவர் கடந்த 08.03.2025 அன்று காலை 11.00 மணியளவில்  ரவிசந்திரனை தொடர்பு கொண்டு நீர்வளத்துறையால் கையகப்படுத்தப்பட்ட, இழப்பீடு கொடுத்த இடத்தில் இருந்து சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் வெட்டியது தொடர்பாக பந்தநல்லூர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாகவும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் தனக்கு வழங்குமாறு மிரட்டியுள்ளார். 

மேலும் மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமலே, தான் ஆட்சியரின் உறவினர் என்றும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்க தன்னால் முடியும் என ரவிச்சந்திரனை நம்ப வைத்துள்ளார்.

மேலும் 1 கோடியா? மனமுடைந்த ஆடிட்டர்

இந்நிலையில் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் நெப்போலியனுக்கு முறையே 25 லட்சம், 55 லட்சம், 20 லட்சம் என ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்ட ஆய்வாளர் நெப்போலியன் மேலும் 1 கோடி ரூபாய் வேண்டும் என்று மிரட்டியதால் மனமுடைந்த ரவிச்சந்திரன் இச்சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். 

புகார் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் Cr.No.06/2025 u/s 316(4), 319(2), 318(4), 351(2) BNS – ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம்  உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்து வந்த நிலையில், 03.04.2025 அன்று தர்மபுரி தொப்பூர் சுங்கசாவடி நிலையம் அருகில் ரவிச்சந்திரனிடமிருந்து காவல் ஆய்வாளர் நெப்போலியன் 5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட போது தனிப்படையினர் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் நெப்போலியன் கும்பகோணம் முதலாவது நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு 15.04.2025-ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறைசாலையில் அடைக்கப்பட்டார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் சோதனைகளில் ஏமாற்றப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read more: உதயநிதி ஜெயிலுக்கு போற நாள் தான்..ஹெச்.ராஜா பேட்டியால் பரபரப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow