கேரள - தமிழ்நாடு எல்லையில் தீவிர சோதனை.. காரணம் இதுதான்..
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கேரளா எல்லைப் பகுதியில் தமிழ்நாடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து போலீசார் மற்றும் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து உள்மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படை கலைக்கப்பட உள்ளது.
ஆனால், மற்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் மாநில எல்லைகளில் மட்டும் சோதனை நீடிக்கும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதன்படி, வரும் 26ம் தேதி கேரளாவில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு – கேரள மாநில எல்லைகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் வகையில், தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் தென்காசி எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குள் செல்லும் வாகனங்கள் முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?