மாதம்பட்டி ரங்கராஜ் புதிய சிக்கல்: ஜாய் கிரிசில்டா அவதூறு பேச்சுக்கு தடை கோரிய வழக்கு:நீதிமன்றம் தள்ளுபடி
தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.
தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல் துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார்.
இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டா-வுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜாய் கிரிசில்டா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி, தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு, திருமணம் செய்து உடன் வாழ்வதாக கூறி ரங்கராஜ் ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார்.
சமுதாயத்தில் செல்வாக்கான மாதம்பட்டிக்கு எதிரான புகார் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார், எந்த விசாரணை நடத்தாமல், அவரை அனுப்பி வைத்தனர். நிறை மாத கர்ப்பிணியான கிரிசில்டாவை 8 மணி நேரமாக காவல்நிலையத்தில் உட்கார வைத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி மகளிர் ஆணையம் உத்தரவிட்டும், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிரிசில்டா தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு டி. என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். டி. என்.ஏ பரிசோதனையில் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க மாதம்பட்டி ரங்கராஜ் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால், நற்பெயரை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் மோசமான வீடியோக்களை பரப்பி, யூடியூப் சேனல்கள் பணமாக்கி வருகின்றன. அத்தகைய யூடியூப் சேனல்கள் தங்களை பற்றி அவதூறான வீடியோக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என, மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இன்று, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, மாதம்பட்டி ரங்கராஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?

