தேர்தல் களம் : துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்... கட்டுக் கட்டாக ரொக்கப் பணம் பறிமுதல்...
மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி தேனி ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தேனி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார். மேலும் பேருந்தில் ஏறி பயணிகளுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தனியார் கல்லூரியிலிருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கியில் செலுத்த கொண்டு வரப்பட்ட ரூ.30 லட்சத்தை தேர்தல் பறக்கும்படையினர் கெங்கராம்பாளையத்தில் பறிமுதல் செய்து முதன்மை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இதற்கிடையில் கும்பகோணம் அருகே திருமண்டங்குடி பகுதியில் பறக்கும் படை ரோந்து வாகனத்தை கண்ட மர்மநபர்கள் ரூ.4000 பணத்தை சாலையில் போட்டுவிட்டு தப்பி சென்றனர். அதனை கைப்பற்றிய அதிகாரிகள் பாபநாசம் வட்டாட்சியர் முன்னிலையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணனிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?