"விவசாயிகளை பாஜக அரசு ஏமாற்றுகிறது" - பஞ்சாப்பில் பி.ஆர்.பாண்டியன் பேச்சு!

Feb 28, 2024 - 20:08
"விவசாயிகளை பாஜக அரசு ஏமாற்றுகிறது" - பஞ்சாப்பில் பி.ஆர்.பாண்டியன் பேச்சு!

பஞ்சாப்பில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற விவசாய தலைவர் பி.ஆர்.பாண்டியன், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை நிறைவேற்றுவோம் என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, விவசாயிகளை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் சம்புபார்டர் பகுதியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில், கடந்த இரண்டு நாட்களாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்டார்.

அதில் உரையாற்றிய அவர், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை முழுமையாக நிறைவேற்றுவோம் என்ற தேர்தல் வாக்குறுதியுடன் மத்தியில் ஆட்சியை அமைத்த பாஜக அரசு, கொள்கை ரீதியாக அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி விவசாயிகளை ஏமாற்றி உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

அதேபோல் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடியபோது, உடனே அச்சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மோடி தெரிவித்த நிலையில் தற்போதுவரை அதை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறார் என்று பேசினார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதற்கான நிரந்தர சட்டமும் சொன்னபடி இதுவரை கொண்டு வரப்படவில்லை என்று கூறினார்.

விவசாயிகளின் போராட்டம் முக்கியமானது என்று பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து டெல்லி போராட்டத்திற்கு வரும் விவசாயிகளைக் காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்திக் கைது செய்கிறார்கள் என்றும், அதனால் தமிழ்நாட்டில் இருந்தபடியே ரயில் மறியல், சாலை மறியல் ஆர்ப்பாட்டங்கள் செய்து டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறோம் என்றும் பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow