"ரூட் தல" மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் இறுதி எச்சரிக்கை

ரயில் நிலையங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால் பிரச்சனைகளில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

Oct 8, 2024 - 17:11
"ரூட் தல" மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் இறுதி எச்சரிக்கை

சென்னையில் ரூட் தல விவகாரத்தில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் வகையில் புதிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர்கள் வினித்- அப்பாஸ்  நடித்து படமாக வெளியான காதல் தேசம்.  90-களிலேயே கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் மோதல்கள் குறித்து விரிவாக இந்த படத்தில் காண்பிக்கப்பட்டது. 28 ஆண்டுகள் ஆகியும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே மோதல் என்பது அதிகம் நடைபெறுகிறது. 

கடந்த வெள்ளிக்கிழமை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவரை  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர். இவர் இன்று சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேர் சுந்தரை மடக்கி நிறுத்தி கொடூரமாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு அனைவரும் தப்பி விட்டனர். தகவல் அறிந்து பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த கல்லூரி மாணவர் சுந்தரை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கழுத்து, காது, மார்பு உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மாணவரின் உயிர் போகும் அளவில் இந்த இரண்டு கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் என்பது உச்சமடைந்ததால் காவல்துறை கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப்பிரிவுகளில் ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இனி வரும் காலங்களில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் ரயில்வே காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி கர்ணன் மற்றும் எழும்பூர் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி ரமேஷ் இணைந்து மாணவர்களுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

புதிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் இதுபோன்று மோதலில் ஈடுபட்டால் பத்து வருடக் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளதாகவும் கல்லூரி நிர்வாகத்திலும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ரயில்வே காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கல்லூரி நிர்வாகம் தரப்பிலும் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் இனிவரும் காலங்களில் தொடர்ந்து மோதல்கள தடுக்கும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதுபோன்று முதலில் ஈடுபடும் மாணவர்கள் பல்வேறு விதமாக அறிவுறுத்தப்பட்டும் எச்சரிக்கையை விடப்பட்டும் தொடர்ந்து ஈடுபடுவதால் இதுபோன்று கடும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பத்து வருடம் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும் வகையிலான நடவடிக்கையை ரயில்வே காவல்துறை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பிரச்சினைகளில் ஈடுபடும் மாணவர்களை பட்டியலெடுத்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னை புறநகர் ரயில் மற்றும் விரைவு ரயில் ஆகியவற்றில் கல்லூரி மாணவர்கள் செல்லும்போது பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் ஒரே நேரத்தில் ரயில்கள் நிற்கும் நேரத்தில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டு ரயிலையே தாமதமாக இயக்கி, மோதல்களை தடுக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போதைய புதிய சட்டத்தின் அடிப்படையில் டிஜிட்டல் ஆதாரங்கள் இருந்தாலே சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என இருப்பதாகவும் ரயில் நிலையங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால் பிரச்சனைகளில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் நேரங்களில் காவல்துறையினர் அவர்களை அழைத்து அறிவுரை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow