அக்.8ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் - முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை
புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றிருக்க கூடிய நிலையில், நடைபெறக்கூடிய அமைச்சரவைக்கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்.8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த செப்.28ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தேர்வாகியுள்ளார். மேலும் புதிய அமைச்சரவையில் கோவி.செழியன், செந்தில் பாலாஜி , ராஜேந்திரன் மற்றும் நாசர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமைச்சர்கள் பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் உள்ளிட்ட6 பேர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதிய அமைச்சர்களுக்கு திட்டங்கள் குறித்து விளக்கவும், துறை சார்ந்து சில அறிவுறுத்தல்களை வழங்கவும், சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெற உள்ளது.
புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றிருக்க கூடிய நிலையில், நடைபெறக்கூடிய அமைச்சரவைக்கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் மதுவிலக்கை படிபடியாக அமல்படுத்த வேண்டும் என்று விசிக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
What's Your Reaction?