“திருப்பதி லட்டு விவகாரமா? Sorry” - ரஜினிகாந்த் பதில்
கூலி படப்பிடிப்பினை முடித்து விட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம் திருப்பதி லட்டு விவகாரம் குறித்துக் கேட்டதற்கு “Sorry" என்று பதிலளித்தார்.
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராகத் திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இவர் இயக்கிய படங்களில் லியோ மட்டும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றபடி அனைத்துப் படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. அதிலும் கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன. லியோ திரைப்படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணிக்காக படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூலி படப்பிடிபினை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
வேட்டையன் படத்தில் தர்பாருக்கு பிறகு முழுவதும் போலீசாக நடிக்கிறீர்கள் இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு, “தர்பார் படத்தில் நடித்த அனுபவத்தில் இருந்து இந்தப் பட அனுபவம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. இப்படம் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யு வகையில் தயாராகியிருக்கிறது. தர்பாரைக் காட்டிலும் வித்தியாசமாக அனைவரும் விரும்பும் படமாக வேட்டையன் வெளியாகும் என்று கூறினார்.
திருப்பதி லட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலகட்டதாக ஆந்திராவில் பெரும் சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது. மெய்யழகன் ப்ரொமோஷனுக்காகச் சென்ற நடிகர் கார்த்தியிடம் லட்டு சாப்பிடுவீர்களா எனக் கேட்டபோது லட்டு மிகவும் சென்சிட்டிவான விஷயம் என்று சொல்ல அது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், ரஜினிகாந்திடம் திருப்பதி லட்டு விவகாரம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு “ஸாரி... நோ கமெண்ட்ஸ்” என்று மட்டும் ரஜினி பதிலளித்தார்.
சென்னை விமான நிலையத்திற்கு அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்த அவரது ரசிகர்களின் குழந்தைகள் வரைந்து கொடுத்த படங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார். ரசிகர்கள் அவருடன் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
What's Your Reaction?