கடலோரக் காவல் படையில் வேலை - 6 லட்ச ரூபாய் மோசடி 

இந்தியக் கடலோரக் காவல் படையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 6 லட்ச ரூபாய் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட ஊழியர் மீது வழக்குப் பதிவு

Sep 28, 2024 - 13:30
கடலோரக் காவல் படையில் வேலை - 6 லட்ச ரூபாய் மோசடி 
scam

சென்னை பட்டாளத்தை அடுத்த பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, சி.எஸ் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராவ்(61) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் தனது மகன் யஷ்வந்த் மற்றும் மகளுக்கு அரசுத் துறையில் வேலை தேடி வந்துள்ளார். அப்போது கடந்த 2022ம் ஆண்டு தனது நண்பர் மூலம் ஆவடி அரிக்கமேடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் (50) என்பவரது அறிமுகம் கிடைத்ததுள்ளது ‌.

நாராயணன் இந்தியக் கடலோரக் காவல் படையில் கார்பெண்டராக வேலை பார்த்து வருவதால் தனது உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் உங்களது மகன் யஷ்வந்த்துக்கு  இந்தியக் கடலோரக் காவல் படையில் எலக்ட்ரிசியன் வேலையும் மகளுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலையும் வாங்கித் தருவதாக வெங்கட்ராவிடம் தெரிவித்துள்ளார். அத்தோடு, இருவருக்கும் வேலை வாங்கித் தர 6 லட்ச ரூபாய் செலவாகும் எனவும் கூறியிருக்கிறார். நாராயணன் கூறியதை நம்பி வெங்கட்ராவ் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாராயணனிடம் தனது மகன் மற்றும் மகள் வேலைக்காக 6 லட்ச ரூபாயைக் கொடுத்துள்ளார். 

பணத்தை பெற்றுக் கொண்ட நாராயணன், நீண்ட நாட்கள் ஆகியும் சொன்னதைப் போல வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்ததால் சந்தேகமடைந்து இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது நாராயணன் அவர்களை ஏமாற்றிப் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டு தெரிய வந்தது. இதனை அறிந்த உடனே வெங்கட்ராவ் நாராயணனிடம் சென்று பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வெங்கட்ராவ் கடந்த பிப்ரவரி மாதம் இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் ஓட்டேரி காவல் நிலைய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட வெங்கட்ராவ் இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்துமாறு ஓட்டேரி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டனர். பின்னர் ஓட்டேரி போலீஸார் வெங்கட்ராவ் புகாரை சட்ட வல்லுநர்கள் குழுவிற்கு அனுப்பி வைத்து அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.  இதனை அடுத்து ஓட்டோரி காவல் துறையினர் இந்தியக் கடலோரக் காவல் படை ஊழியர் நாராயணன் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow