சவுக்கு சங்கரால் வந்த வினை.. ரெட் ஃபிக்ஸ் தலைமை நிர்வாகி கைது.. டெல்லியில் வைத்து தூக்கிய போலீஸ்..
பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறு பேசிய விவகாரத்தில், அவரை பேட்டி எடுத்த ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட பல மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகளின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே காவலர்கள் குறித்து அவதூறு பேசிய நேர்காணலை ஒளிபரப்பிய ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த முன் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது, யூடியூப் சேனல்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டு சமுதாயத்தில் அமைதி இன்மையை ஏற்படுத்துவதாக நீதிபதி குமரேஷ்பாபு கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கில் அநாகரீகமாக விவாதம் செய்த ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மனுதாரருக்கு தற்போது இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க முடியாது எனக் கூறிய நீதிபதி, வழக்கில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில் டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனிடம் மனு அளிக்க சென்ற ஃபெலிக்ஸ் ஜெரால்டை நேற்று (மே 10) இரவு 11.30 மணி அளவில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். அவதூறு வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு கோவை போலீசார் சம்மன் வழங்கியிருந்த நிலையில், அவரை திருச்சிக்கு அழைத்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?