WCL தொடரில் இனி பங்கேற்க மாட்டோம்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி
இனி நடைப்பெறும் உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தான் அணியும், வீரர்களும் பங்கேற்க தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (pakistan cricket Board-PCB).

கடந்த ஜூலை 18 ஆம் தேதி தொடங்கிய உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் இந்த தொடரில் விளையாடி வந்தார்கள். கடந்தாண்டு முதல் WCL தொடர் நடைப்பெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரினை இந்திய அணி வென்ற நிலையில், நடப்பாண்டு நடைப்பெற்ற WCL தொடரினை தென்னாப்பிரிக்கா அணி வென்றது.
மொத்தம் 6 அணிகள் போட்டியிட்ட நடப்பாண்டு தொடரில், லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதியது. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த வகையில், லீக் சுற்று முடிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் விளையாட மறுப்புத் தெரிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அரையிறுதிப் போட்டியிலும் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுத்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் நேரடியாக இறுதிப்போட்டி முன்னேறியது.
பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தது ஏன்?
சமீபத்தில் காஷ்மீர் பஹல்காமில் நடைப்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான அரசியல் உறவு மோசமடைந்தது.
ஒருக்கட்டத்தில் இந்தியா, ’ஆப்ரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்களை தொடுத்தது. இந்த காரணங்களை முன்வைத்து தான் இந்தியா அணியின் நட்சத்திர வீரர்கள் ஹர்பஜன், ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, பதான் சகோதாரர்கள் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்புத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான லீக் போட்டியும், அரையிறுதி ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தான் பங்கேற்க தடை விதித்த PCB:
மொஹ்சின் நக்வி தலைமையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 79வது ஆளுநர் குழு கூட்டம் சமீபத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் WCL தொடரில் பாகிஸ்தான் அணிக்கு விதிக்கப்பட்ட அநீதி குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் பாகிஸ்தான் அணியும், வீரர்களும் WCL தொடரில் பங்கேற்ற தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “WCL தொடரில் நடுநிலைத் தன்மை கடைப்பிடிக்கப்பட வில்லை. இந்தியா லீக் சுற்றில் விளையாட மறுத்த காரணத்தினால் தான் போட்டி ரத்தானது. ஆனால் இந்திய அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வெளிப்புற அழுத்தத்தினால் தான் WCL நிர்வாகம் இந்திய அணிக்கு சாதகமாக நடந்துக் கொண்டது. இதனை PCB இனி மன்னிக்க முடியாது. அதனால், இனி எதிர்காலத்தில் பாகிஸ்தான் WCL தொடரில் முழுமையாக பங்கேற்ற தடை விதிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.
இறுதிப்போட்டியில் தோல்வி:
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று WCL கோப்பையை முதன் முறையாக வென்றது தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி.
கடந்தாண்டு நடைப்பெற்ற உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்று கோப்பை வெல்லும் வாய்ப்பினை இழந்தது. இந்தாண்டும் இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வியுற்ற நிலையில் இனி WCL தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது என தெரிவித்துள்ளது.
What's Your Reaction?






