'சொட்ட சொட்ட நனையுது' என் ஜாதிக்காரன் படம்.. ரோபோ சங்கர் பேச்சு
“சொட்ட சொட்ட நனையுது” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இப்படத்தின் நடிகர் நிஷாந்த் ரூஷோ படத்தின் கெட் அப்பில் நிகழ்விற்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் S ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி மற்றும் ஷாலினி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”.
இளம் வயதில் முடி உதிர்ந்த நாயகனுக்கு, வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுவதும், அதைத் தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக படத் தயாரிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
ஆகஸ்ட் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரங்கள் பின்வருமாறு-
நடிகர் நிஷாந்த் ரூஷோ பேசுகையில், ”எனது ஐந்தாவது படம் இது. இந்த கதை கேட்டபோது, முடி உதிர்ந்த ஒருவரின் வலியை எப்படி திரையில் கொண்டு வர முடியும் என யோசித்தேன். ஆனால் இயக்குநர் நவீத், நிஜ வாழ்க்கையில் முடி உதிர்ந்த சிலரை சந்திக்குமாறு கூறினார். அவர்களை சந்தித்த பின்னரே, அவர்களின் வலிமையைப் புரிந்து கொண்டேன். முடி உதிர்வது என்பது இயற்கையானது. ஆனால் அதை ஒரு குறையாகப் பார்ப்பதால், பலரது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த படம் பார்த்த பிறகு, யாரும் முடி உதிர்ந்தவர்களை மோசமாக நடத்த மாட்டார்கள். இது உங்கள் மனதை மாற்றும். படக்குழுவினர் அனைவரும் முழு உழைப்பைக் கொடுத்துள்ளனர்” என்றார்.
நடிகை வர்ஷிணி வெங்கட் கூறுகையில், ”இந்தப் படத்தில் முடி எவ்வளவு முக்கியம், இல்லை என்பதை சொல்லியிருக்கிறோம். நான் ஒரு நடிகையாக வேண்டும் என்ற கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. படப்பிடிப்பு மிகவும் கலகலப்பாக இருந்தது. எங்கள் குழுவில் பல புதுமுகங்கள் பணியாற்றியுள்ளனர். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
நடிகர் ரோபோ சங்கர் படம் குறித்து பேசுகையில், “இது என் "ஜாதிக்காரன்" படம், அது வேறு எதுவுமில்லை, நகைச்சுவை ஜாதிதான். இது ஒரு முழுமையான நகைச்சுவைப் படம், நீங்கள் ரசித்து சிரிக்கும்படி இருக்கும். இயக்குநர் நவீத் மிகவும் அருமையாக இயக்கியுள்ளார். ஐந்து படங்கள் நடித்த ஒரு நாயகன், தனது இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் அதே கெட்டப்பில் மேடைக்கு வந்தது பாராட்டுக்குரியது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் நவீத் S ஃபரீத் படம் குறித்து பேசுகையில், ”இது எனக்கு முதல் மேடை, அதனால் பதட்டமாக இருக்கிறேன். முதலில் வேறு ஒரு கதை எடுக்கலாம் என நினைத்தோம். ஆனால் நிதி கிடைக்காததால், இந்தக் காமெடி படத்தை எடுக்க முடிவு செய்தோம். படப்பிடிப்பு நடத்த எங்களிடம் 10 நாட்கள் மட்டுமே பணம் இருந்தது. ஆனால் 18 நாட்களில் படத்தை முடித்தோம். அப்பா, அம்மா மற்றும் நண்பர்கள் அளித்த ஆதரவால் இது சாத்தியமானது. இந்த படம் குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்கும்படி இருக்கும், எல்லோரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு கொடுங்கள்” என்றார்.
What's Your Reaction?






