ஹிந்தியில் பேச வேண்டுமா? கோபமடைந்த பிரபல பாலிவுட் நடிகை கஜோல்
பாலிவுட் பிரபல நடிகை கஜோல் மகாராஷ்டிராவில் நடைப்பெற்ற நிகழ்வில் ஹிந்தியில் பேச மறுத்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

தில்வாலே, குஜ் குஜ் ஹோத்தா ஹை, கபி குஷி கபி காம் போன்ற பல்வேறு ஹிந்தி திரைப்படங்களிலும், மின்சார கனவு மற்றும் வேலையில்லாத பட்டதாரி (part 2) போன்ற தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கஜோல். இவரது கணவர் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். 51 வயதாகும் கஜோலின் பூர்விகம் மஹாராஷ்டிரா மாநிலம் தான்.
கடந்த செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 05), மும்பையில் மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள் 2025 தொடர்பான நிகழ்வு நடைப்பெற்றது. இந்திய சினிமாத்துறையில் கஜோல் ஆற்றிய பங்களிப்பினை கௌரவிக்கும் விதமாக நடிகை கஜோலுக்கு மதிப்புமிக்க ராஜ் கபூர் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கஜோல் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
தன் தாய் மொழியான மராத்தியிலும், ஆங்கிலத்திலும் பத்திரிக்கையாளரின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் ஹிந்தியில் பேசுமாறு கூறினார். இதனால், சட்டென்று கோபமடைந்த நடிகை கஜோல், “ஹிந்தியில் இப்போது நான் பேச வேண்டுமா? நான் பேசுவது யாருக்கு புரிய வேண்டுமோ அவர்களுக்கு புரியும்” என பத்திரிக்கையாளரை நோக்கி காட்டமாக பதிலளித்தார்.
இதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு சில பயனர்கள், ஹிந்தியில் பேச மறுத்த கஜோலினை கடுமையாக தாக்கி பேசினர். ஒரு பயனர் தனது பதிவில், “அப்படியானால் ஏன் நீங்கள் (கஜோல்) ஹிந்தி படங்களில் நடிக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு பயனர், “இனி மேல் நீங்கள் (கஜோல்) இந்தி படங்களை நடிப்பதை நிறுத்திவிட்டு, மராத்தி மொழி படங்களில் மட்டும் நடியுங்கள்” என தெரிவித்துள்ளார். மற்றொருவர், “இந்தி ரசிகர்கள் மூலம் பணமும், புகழையும் சம்பாதித்த பிறகு இந்தியில் பேச வேண்டுமா? என கேட்பது” எந்த வகையில் நியாயம் என குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட தேசிய கல்வி கொள்கையினை அமல்படுத்துவதில் இந்தி மொழியை கட்டாயமாக்கியதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரசு அந்த முடிவிலிருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது. மராத்தி மொழியில் பேசிய கஜோலுக்கு ஆதரவாக மகாராஷ்டிரா மாநில மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
கஜோலின் நடிப்பில் இறுதியாக சர்ஷாமீன் திரைப்படம் வெளியாகியது. இதில் இப்ராஹிம் அலி மற்றும் பிரித்விராஜ் சுகுமாறன் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது, தி ட்ரையல் சீசன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






