குண்டர் சட்டத்தில் கைதான சவுக்கு சங்கர் விடுவிப்பு

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை விடுவிக்க உத்தரவு உச்சநீதி மன்றம் பிறப்பித்துள்ளது. 

Sep 25, 2024 - 19:06
குண்டர் சட்டத்தில் கைதான சவுக்கு சங்கர் விடுவிப்பு
savukku sankar

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து  சிறையில் அடைத்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.

பெண் காவலர்களையும், காவல் துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாகக் கூறி  சவுக்கு சங்கர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து தவறாக பொதுமக்களிடம் வதந்தி பரப்பியதாகவும், தமிழக அரசுக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டியதாகவும் கடந்த மே மாதத்தில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதன் பின்னர் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவினை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி உத்தரவிட்டது. மேலும், வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 

 அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உத்தரவிட்டார். இந்க்த நிலையில், சவுக்கு சங்கரின் தாயார் கமலா சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை, குண்டர் தடுப்பு சட்ட அறிவுரைக் குழு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது. எனவே, சவுக்கு சங்கரை 2வது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லையெனில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow