மதுரை மேயரை கதறவிட்ட தாத்தா… பரபரப்பாக நடந்த குறைதீர் கூட்டம்!
ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என மதுரை மாநகராட்சி மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முதியவரால் பரபரப்பு.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மண்டலம் எண் ஐந்து அலுவலகத்தில் மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவனியாபுரம், திருநகர், நிலையூர், தனக்கன்குளம் மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலரும் கலந்துக் கொண்டனர்.
அப்போது திருநகர் பகுதியில் சேர்ந்த முதியவர் ஒருவர் 500கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் 97வது வார்டு ஸ்ரீனிவாசா மற்றும் கற்பக நகரில், மூன்று வருடங்களுக்கு மேலாக மின்விளக்குகள், குடிநீர் மற்றும் சாலை வசதிகள் அமைக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து, இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த முதியவர் கூறினார்.
இந்த நிலையில், தனது குறைகளை கூறிவந்த அந்த முதியவர், ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என மதுரை மேயர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உடனே மதுரை மேயரும், “உங்களது குறைகளை உடனடியாக சரி செய்வதற்கு அதிகாரிகளிடம் அறிவுறுத்துகிறேன்” என்று கூறினார். அதன் பின்னர் தான் அந்த பெரியவர் புறப்பட்டார். இதனால் மண்டல குறை தீர்ப்பு கூட்டம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
பின்னர், மக்கள் தங்கள் அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை மதுரை மாநகராட்சி மேயர் இந்திரா ராணி பொன் வசந்த் மற்றும் மண்டல தலைவர் சுவிதா விமலிடம் மனுக்களை அளித்தனர். காரசாரமாக நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையர் வராதது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?