மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம்: 2 தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு இடமாற்றம்

தமிழரசி மற்றும் சண்முகசுந்தரம் முறையே விருகம்பாக்கம், அடையார் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Sep 25, 2024 - 07:41
மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம்: 2 தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு இடமாற்றம்
சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதற்கு பல்வேறு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் சார்பில் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அசோக் நகர் பள்ளியில் தலைமை ஆசிரியை தமிழரசி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணுவின் பேச்சிற்கு நிகழ்ச்சியின் போதே எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். 
வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அரசு பள்ளிகள் நிகழாத வண்ணம், பள்ளிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சி நடந்த பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். இரு ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. 
சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் ஜாமின் கோரப்போவது இல்லை எனப் பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அனுமதி பெற்று தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை பள்ளிக்கல்வித்துறை இடமாற்றம் செய்தது.
மேலும் இடமாற்றம் செய்யப்பட்ட இரு தலைமை ஆசிரியர்களையும் அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், கடந்த 6ம் தேதி பணியிட மாற்றம் உத்தரவு பிறக்கப்பிக்கட்டிருந்த நிலையில், இருவரும் புதிய பணி இடங்களில் சேராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இரு தலைமை ஆசிரியர்களும் மீண்டும் சென்னை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழரசி மற்றும் சண்முகசுந்தரம் முறையே விருகம்பாக்கம், அடையார் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow