சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு: தமிழக அரசை கடுமையாக சாடிய இபிஎஸ்

எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெறுவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

Oct 9, 2024 - 21:14
சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு: தமிழக அரசை கடுமையாக சாடிய இபிஎஸ்

திமுக ஆட்சியில் எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித்தாக்குதல் நடைபெறுவது மிகுந்த கண்டனத்திற்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப் பொருள் நடமாட்டம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான கொலை வெறித் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் பகுதி, அதிமுக நிர்வாகி ராஜா (எ) ஜூனியர் ராஜா என்பவர் சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட ஸ்டாலினின் தி.மு.க. அரசைக் கண்டித்து நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் அவரது வட்டத்திலிருந்து திரளான பொதுமக்களை அழைத்துச் சென்று பங்கேற்றுள்ளார். பின்னர் அன்று மாலை  வாகனத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பி.கே. புதூர், இந்திராநகர், ரேஷன் கடை அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ராஜாவின் வாகனத்தை மறித்து சர்வசாதாரணமாக, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.ராஜாவின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், அதிமுக வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயலாளர் போகர் ரவி மனித சங்கிலிப் போராட்டத்தின்போது, பேரூராட்சியின் அவலங்களை எடுத்துரைத்துள்ளார். இதன் காரணமாக இன்று பேரூராட்சி செயல் அலுவலரை வேலை நிமித்தமாக பார்க்கச் சென்ற ரவி, திமுக-வைச் சேர்ந்த பேருராட்சி மன்றத் தலைவியின் கணவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் சிலர் ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியதாகவும், இத்தாக்குதலில் காயமடைந்த ரவி சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இத்தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மு.க.ஸ்டாலினின்  திமுக அரசில் தொடர்ந்து  எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெறுவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.தாக்குதலுக்குள்ளான அதிமுக அளித்த புகாரினை பதிவு செய்து, தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் துறையை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow