ரவுடி சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன தான் பகை? வெளியான உண்மை!
ரவுடி சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே என்ன பகை என்பது குறித்து காலவ்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை சென்னை காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சுமார் 5 ஆயிரம் பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், 30 பேரின் பெயர்கள் முக்கிய நபர்களாக இடம்பெற்றுள்ளன. அதில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனும், 2-வது குற்றவாளியாக சம்போ செந்திலும் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன் பகையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணம் என்று குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலுக்கும் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை என்பதனை போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த குற்றப்பத்திரிக்கையில், ”சம்போ செந்தில் குடும்பத்தோடு ராயபுரத்தில் வசித்து வந்தார். சம்போ செந்திலின் தந்தை 2002ல் தலைமைச் செயலக காலனி குடியிருப்பு பகுதியில் ஒரு இடத்தை வாங்கினார். அந்த இடத்திற்கு அருகே உள்ள இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்ததாக கூறி ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு பிரச்னை செய்ததாக தெரிகிறது.
’இது எங்களது இடம்’ என கட்டப் பஞ்சாயத்து செய்து ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அறிந்த சம்போ செந்தில் தனது தந்தைக்காக பஞ்சாயத்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இடத்தை காலி செய்வோம் என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மிரட்டியதாக தெரிகிறது. அதன் பிறகு பலகட்ட பேச்சுவார்த்தை பிறகு 12 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அன்று முதலே சம்போ செந்தில்- ஆம்ஸ்ட்ராங் இடையே பகை தொடங்கியது” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதை மனதில் வைத்துக்கொண்டு ஆம்ஸ்டாராங் கொலைக்கு சம்போ செந்தில் தனது சொந்த பணமான 4 லட்சத்தை செலவிட்டதும், மற்றுவர்கள் மூலமாகவும் பணத்தை ஏற்பாடு செய்து கொலை திட்டத்திற்கான பணத்தை கொடுத்தது தொடர்பாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?