Train Travel-ல சத்தமா ரீல்ஸ் பார்க்குறவங்களா நீங்க? இனி Phone-ஏ நோண்ட முடியாது... ஆக்ஷனில் Southern Railways..!
ரயிலில் பயணம் செய்யும்போது ஹெட்போன் இல்லாமல் சத்தமாகப் பாட்டு கேட்பது, ரீல்ஸ் பார்ப்பது, மொபைலில் கேம் விளையாடுவது என சக பயணிகளின் காதுகளைச் சோதிப்பவர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளதோடு,,. எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து தொந்தரவு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
ரயிலில் ஜன்னலோர சீட் கிடைக்கிறதோ இல்லையோ... பக்கத்தில் இருப்பவர் போனில் என்ன பார்க்கிறார் என்பது மட்டும் ஒட்டுமொத்தப் பெட்டிக்கும் தெரிந்து விடும். அந்தளவிற்கு சத்தத்தை வைத்தே அவர் என்ன பார்க்கிறார்? என்பதை கண்டுபிடித்து விடலாம். ஆனால், அப்படி ஹெட்போன் இல்லாமல் பாட்டு, வீடியோ, ரீல்ஸ் எனச் சத்தத்தை அலறவிட்டு, சக பயணிகளையும் சேர்த்துப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் சிலருக்கு இனி சிக்கல் காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் மொபைல் போன்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் பார்ப்பது, கேம்கள் விளையாடுவது போன்ற செயல்களால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்குமாறு தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
எச்சரிக்கையை மீறினால் அபராதமா?
தெற்கு ரயில்வே பயனாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி தெரிவித்த தகவலின்படி, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் அதிக சத்தத்துடன் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருத்தப்பட்ட ரயில்வே சட்ட விதிகளின் கீழ், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எச்சரித்தும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
டிக்கெட் பரிசோதகர்களுக்கும் அதிகாரம்!
இந்த நடவடிக்கை தொடர்பாக அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் மூத்த வணிகப் பிரிவு அதிகாரிகள் அபராதம் வசூலிக்க அதிகாரம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, ரயிலில் பயணம் செய்யும்போது நம்முடைய மொபைலில் என்ன பார்க்கிறோம் என்பது நமது விருப்பம் என்றாலும், அதன் சத்தம் அடுத்த இருக்கையில் இருப்பவரின் காதுகளைப் பதம் பார்க்கக் கூடாது என்பதுதான் ரயில்வேயின் அறிவுறுத்தல்.
ஹெட்போன் போட்டுக்கோங்க... நிம்மதியாகப் பயணம் செய்யுங்க!
பயணத்தின்போது பாடல்கள் கேட்கவும், வீடியோக்கள் பார்க்கவும் ஹெட்போன் அல்லது இயர்போன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மொபைல் போனில் பேசும்போது குரலைத் தாழ்த்திப் பேசுவதும் அவசியம்.
ஏற்கெனவே ரயிலில் இருக்கை கிடைக்குமா, ஜன்னலோர இடம் கிடைக்குமா என்று பயணிகள் கவலைப்படும் நிலையில், அருகில் இருப்பவர் போனில் அலறவிடும் ரீல்ஸ் சத்தத்தையும் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இனியாவது ஹெட்போன் பயன்படுத்தினால், அவரவர் காதுகளுக்கு அவரவர் பொறுப்பு... சக பயணிகளுக்கும் கொஞ்சம் நிம்மதி.
What's Your Reaction?

