vote chori: மயங்கி விழுந்த பெண் MP.. தடுப்புகளை தாவிக் குதித்த அகிலேஷ்.. கைதான ராகுல்!
வாக்காளர் பட்டியல் முறைகேட்டினை கண்டித்து தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் சென்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் வரை எதிர்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்ற பேரணியைத் தொடர்ந்து, டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. காவல்துறையினர் வழியெங்கும் தடுப்பு அரண்களை அமைத்து, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் கூடுதல் பாதுகாப்பு வாகனங்களும், விரைவு எதிர்வினைப் படைகளும் (Quick reaction teams) நிறுத்தப்பட்டிருந்தன.
தடுப்பு அரண்களை தாண்டிய அகிலேஷ் யாதவ்:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா மற்றும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஞ்சிதா ரஞ்சன் மற்றும் ஜோதிமணி போன்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பு அரண்களைத் தாண்டிச் செல்ல முயன்றனர். அதேசமயம், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மற்ற தலைவர்கள் அந்த இடத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மிதாலி பாக் மயங்கி விழுந்தார். அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட மற்ற தலைவர்கள் உதவி செய்தனர். தடுப்பினை மீறி சில எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி நகர முயன்றதையடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் போன்ற பல எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மனிதன் ஒரு வாக்கு:
கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, “இந்தப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. இந்தப் போராட்டம் ஒரு மனிதனின், ஒரு வாக்குக்கானது. எங்களுக்குத் தேவை தூய்மையான வாக்காளர் பட்டியல்”என குறிப்பிட்டார்.
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் மற்ற மாநிலங்களின் வாக்காளர் பட்டியலிலுள்ள பிற பிரச்சினைகள் குறித்த மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க விரும்புவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
What's Your Reaction?






