குமுதத்துக்கு நன்றி- ’அவரும் நானும்’ புத்தக வெளியீட்டில் துர்கா ஸ்டாலின் நெகிழ்ச்சி!
துர்கா ஸ்டாலின் அவர்கள் தான் எழுதிய ‘அவரும் நானும்’ புத்தகத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்வில், குமுதம் நிறுவனத்திற்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின், தன் கணவருடனான வாழ்க்கைப் பயணம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை 'குமுதம் சிநேகிதி' இதழில் 5 ஆண்டுகள் தொடராக எழுதிவந்தார். வாசகர்களின் பேராதரவைப் பெற்ற அந்தத் தொடர், 'அவரும் நானும்' எனும் தலைப்பில் 2018ம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. அதில், திருமணம் முதல் 2017ம் ஆண்டு வரையிலான வாழ்வியல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இந்தத் தொடரின் தொடர்ச்சி மற்றும் அதன்பிறகான சம்பவங்களை நூலின் இரண்டாம் பாகமாக எழுதியிருக்கிறார், துர்கா ஸ்டாலின். அந்நூலின் வெளியீட்டு விழா கடந்த ஜூலை 21ம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த துர்கா ஸ்டாலின், கணவர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் தவிப்போடு காணப்பட்டாலும், பேரப் பிள்ளைகளைக் கண்டு முக மலர்ச்சியோடு கொஞ்சி பேசத் தொடங்கிவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பிரபல எழுத்தாளர் சிவசங்கரி நூலின் முதல் பிரதியை வெளியிட, டாஃபே குழுமத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன் அதனைப் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை துர்கா ஸ்டாலின் பேரப்பிள்ளைகளான இன்பன் உதயநிதி, நிலானி உதயநிதி, தன்மயா சபரீசன், நலன் சபரீசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்புரை:
விழா ஏற்பாடுகளை முன்னின்று செய்திருந்தத் தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்புரை ஆற்றியபோது, "அரசியல் தலைவர்கள் வெற்றிவாகை சூடிய வரலாற்றுக் கதைகள், அந்தந்த தலைவர்கள் கோணத்தில் எத்தனையோ நூல்களாக எழுதப்பட்டிருக்கின்றன. தலைவர்களின் போராட்டக் காலத்தில் அவர்களின் குடும்பம் என்னவாக இருந்தது.. ஏற்றமோ, இறக்கமோ, புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு தலைவர்களுக்கு நிகராக உடன் பயணிக்கின்ற இல்லத்தரசிகளின் எண்ண ஓட்டங்கள் எப்படிப்பட்டவை என்பதை இந்த இரண்டாம் பாகம் அச்சு அசலாக விவரிக்கிறது.
எளிமையான மொழிநடை இந்தப் புத்தகத்தின் பலம். தமிழ்நாட்டுப் பெண் வாசகர்களை ஈர்த்திருப்பது இந்நூலின் வசீகரம். இந்த நூல், ஓர் அரசியல் குடும்ப ஆவண நூல்" என்று நெகிழ்ந்தார்.
இதன் தொடர்ச்சியாக, கவிஞர் மனுஷ்யபுத்திரன், நீதியரசர் பவானி ஆகியோர் உரையாற்ற. தொடர்ந்து பேசிய எழுத்தாளர் சிவசங்கரி, தலைப்பு, எழுதப்பட்டுள்ள எளிய நடை, உள்ளடக்கம் என இந்தப் புத்தகத்தில் மூன்று சிறப்பம்சங்கள் இருக்கின்றன. புனைக்கதைக்கு இருக்கக்கூடிய அதே சுவாரசியம் மிக்க, ஆனால் உண்மை உள்ளடக்கத்துடன் கையில் எடுத்தாலே கீழே வைக்கத் தோன்றாமல் படிக்கும் அளவிற்கு இந்த இரண்டு பாகங்களும் அமைந்திருக்கின்றன. அதேபோல், இந்த இரண்டாம் பாகத்தை முதல்வரின் பொறுப்புள்ள மனைவியாக இருந்து, வேஷம் போடாத எழுத்துகளால் எழுதியிருக்கிறார், துர்கா ஸ்டாலின்.
முதல்வரின் மனிதநேயம் மிகுந்த, பாசமுள்ள மறுபக்கத்தை அவர் சொன்னவிதம் அபாரமாக இருக்கிறது. முதல்வரின் கொள்கைகள் வேறு. ஆனால், துர்கா கோயில்களுக்குச் சென்றதைப் பற்றி வெளிப்படையாக எழுதும் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறாரே, அவர் ஒரு சிறந்த கணவர்” என பாராட்டி, வாழ்த்தினார்.
துர்கா ஸ்டாலின் உரை:
இறுதியாக ஏற்புரை வழங்கிய துர்கா ஸ்டாலின், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக, கட்சித் தலைவராக அவர்களுக்குப் (மு.க.ஸ்டாலின்) பல்வேறு பணிகள் இருந்தாலும், ஒரு கணவராக எனக்காக நேரம் ஒதுக்கியதோடு, தனக்குக் கிடைத்த நேரத்தில் இந்த நூலை முழுவதும் படித்து, எனக்கு சில ஆலோசனைகளும் வழங்கினார். மேலும் இந்நூலுக்கு அன்பு உரையும் அவரே எழுதிக்கொடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த விழாவிற்கு அவரால் வரமுடியவில்லை என்றாலும், அவரது மனம் முழுக்க இங்குதான் இருக்கும்.
நேரலையில் முழு நிகழ்வையும் பார்த்துக்கொண்டிருக்கும் என் கணவருக்கு முதல் நன்றி. சொல்லப்போனால், 'கண்டிப்பாக நிகழ்ச்சிக்குச் சென்று நல்லபடியாக நடத்திவிட்டு வா' என்று வாழ்த்தி அனுப்பியதும் அவர்தான்” என்று நெகிழ்ந்தவர், நூல் வெளியீட்டுக்கு உதவியவர்கள், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
"பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய துணை முதலமைச்சருக்கு என் நன்றி" என சொன்னதும் அரங்கே ஒருகணம் கலகலப்பானது.
தொடர்ந்து பேசியவர், நமது குமுதம் நிறுவனத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார். 'அவரும் நானும்’ புத்தகத்தின் இரு பாகங்களையும் நான் எழுதும்போது, குமுதம் ஆசிரியர் குழுவினர் என்னுடன் இருந்து என் உணர்வுகளையும் என் எண்ணங்களையும் அழகாக எழுத்தாக்கம் செய்து உதவினர். அப்படிதான் இரண்டு பாகங்களையும் நான் தொடராக எழுதினேன். அவர்களுக்கு என்னுடைய பிரியமான நன்றி. இந்தத் தொடரை வெளியிட்ட குமுதம் நிறுவனத்திற்கும் என் நன்றி” என்று உளப்பூர்வமாக நினைவுகூர்ந்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் 'அவரும் நானும்' புத்தகங்களை வாங்கிய மக்கள் பிரதிநிதிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர், துர்கா ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றனர்.
(கட்டுரையாளர்: அ.கண்ணதாசன், படங்கள்: ம.செந்தில்நாதன், குமுதம் 06.08.2025)
What's Your Reaction?






