Sardar 2: கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து... சண்டை பயிற்சியாளருக்கு நடந்த சோகம்!
கார்த்தியின் சர்தார் 2ம் பாகம் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், சண்டை பயிற்சியாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு 15ம் தேதி தொடங்கியது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில், கார்த்தியுடன் எஸ்ஜே சூர்யாவும் நடித்து வருகிறார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2ம் பாகத்துக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. முதல் பாகத்தை போலவே சர்தார் 2ம் பாகமும் ஆக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சர்தார் 2 படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்தில், சண்டை பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள எல்வி பிரசாத் லேப்பில் செட் அமைத்து இந்த படத்திற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று கார்த்தியுடன் சுமார் 60 ஸ்டண்ட் கலைஞர்கள் நடித்த சண்டை காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்புராயன் எடுத்து வந்தார். அப்போது சுமார் 20 அடி உயரத்தில் நின்றுகொண்டு ஸ்டண்ட் பணிகளில் ஈடுபடும் நபரின் கையிறை இழுக்கும் பணியை ஏழுமலை என்பவர் கவனித்து வந்துள்ளார். ஆனால், ஏழுமலை திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவரது தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
உடனடியாக கார்த்தியும் அங்கிருந்த படக்குழுவினரும் படுகாயம் அடைந்த ஏழுமலையை மீட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், கார்த்தியும் அப்போது மருத்துவமனையில் இருந்து ஏழுமலைக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஏழுமலை நள்ளிரவில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கே.கே. நகர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கடந்த 35 வருடங்களாக பல்வேறு திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி உள்ள ஏழுமலையின் வயது 54 ஆகும். எந்த பாதுகாப்பு உபகரணமின்றி ஸ்டண்ட் பணிகளில் ஈடுபடும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஏழுமலை சுமார் 2000 படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி உள்ளார். சிவாஜி முதல் கார்த்தி வரை நடிகர்களுக்கு ஸ்டண்ட் காட்சிகளில் ரோப் அமைத்து அவர்களுக்கு காயம் ஏற்படாமல் தடுக்க உதவும் பணியை ஏழுமலை செய்து வந்துள்ளார்.
உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலையின் உடல் கேகே நகர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஸ்டண்ட் இயக்குநரும் நடிகருமான பெப்சி விஜயன், ஸ்டண்ட் இயக்குநர்கள் ஜாக்குவார் தங்கம், ராஜசேகர் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்களும் மருத்துவமனைக்கு சென்று ஏழுமலையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஏழுமலை சமீபத்தில் தான் விஜய்யின் GOAT திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஏழுமலையின் மகனுக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நடக்க உள்ளதாக அவருடன் பணியாற்றி வரும் ஸ்டண்ட் கலைஞர் வினோத் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்ததால் சர்தார் 2 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது. மெய்யழகன், வா வாத்தியாரே படங்களில் நடித்து முடித்துவிட்ட கார்த்தி, அதனைத் தொடர்ந்து சர்தார் 2வில் இணைந்தார். கார்த்தியுடன் எஸ்ஜே சூர்யாவும் கமிட்டாகியுள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்பை வேகமாக முடித்துவிட இயக்குநர் பிஎஸ் மித்ரன் பிளான் செய்திருந்தார். ஆனால், இப்போது திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்து 3 உதவி இயக்குநர்கள் பலியாகினர். இதனிடையே தற்போதைய விபத்து காரணமாக சர்தார் 2 படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளதாகவும், விரைவில் மீண்டும் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?