Indian2 Box Office: கமல், ஷங்கர் கூட்டணிக்கு தொடரும் சோகம்... இந்தியன் 2 ஐந்தாவது நாள் வசூல்
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தின் 5வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழில் இந்தாண்டின் முதல் பெரிய பட்ஜெட் படமாக இந்தியன் 2 வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், ராக்ஸ்டார் அனிருத் என மாஸ் கூட்டணியில் வெளியான இந்தியன் 2, இண்டஸ்ட்ரியல் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததில் பாதியளவு கூட சக்சஸ் இல்லாமல் படுதோல்வியடைந்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். கடந்த வாரம் 12ம் தேதி ரிலீஸான இந்தியன் 2 முதல் வாரத்திலேயே பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
ரிலீஸுக்கு முன்பே இந்தியன் 2 படத்துக்கு மிகப் பெரிய அளவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கமல், சித்தார்த், எஸ்ஜே சூர்யா ஆகியோர் பங்கேற்றும் இந்தியன் 2 படத்துக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றே தெரிகிறது. முக்கியமாக இந்தியன் 2 தோல்விக்கு இயக்குநர் ஷங்கர் தான் காரணம் எனவும், அவரது ஓவர் கான்ஃபிடெண்ட், மேக்கிங், அதே லஞ்சம், ஊழல் போன்ற உருட்டுகள் எந்த விதத்திலும் சர்ப்ரைஸ் செய்யவில்லை என்பதே ரசிகர்களின் விமர்சனமாகும். அதேபோல் கமலின் இந்தியன் தாத்தா கெட்டப், அனிருத்தின் பிஜிஎம் ஆகியவையும் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டன.
இன்னொரு பக்கம் கதையே இல்லாத படத்துக்கு 3 மணி நேரம் ரன்னிங் டைம் அதிகம் என்றும் நெட்டிசன்கள் பங்கம் செய்தனர். இதனால் 12 நிமிடங்கள் வரை எடிட் செய்யப்பட்டும் இந்தியன் 2ம் பாகத்தை ரிலீஸ் செய்துவிட்டனர். ஆனாலும் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இல்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் 5வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளில் மட்டுமே 25 கோடி ரூபாய் வசூலித்தது இந்தியன் 2. கமல், ஷங்கர் கூட்டணிக்கு இதுவே மிக குறைவான கலெக்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், சனிக்கிழமையான இரண்டாவது நாள் 18 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 15 கோடியும் வசூலித்தது இந்தியன் 2. நான்காவது நாளில் மொத்தமே 3 கோடி ரூபாய் மட்டுமே கலெக்ஷன் செய்ததாக சொல்லப்பட்டது. இதற்கு மேல் இந்தியன் 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதிகமாக வாய்ப்பில்லை என கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் 5வது நாளிலும் மொத்தம் 3 கோடி ரூபாய் மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளதாம். இதனால் கமல், ஷங்கர், லைகா நிறுவனம் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்தியன் 2வில் விட்டதை, இப்படத்தின் மூன்றாம் பாகம் வசூலிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதனிடையே, இந்தியன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தடுமாறி வருவதால் தான், படக்குழு தரப்பில் இருந்து அபிஸியலாக எந்த அறிவிப்பும் வரவில்லை என சொல்லப்படுகிறது. அதாவது, தினமும் தங்களது சமூக வலைத்தளங்களில் இந்தியன் 2 படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டி வருவதாகவும் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். ஆனால் மறந்தும் கூட இந்தப் படத்தின் வசூல் பற்றி அபிஸியலாக அறிவிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?