உதயநிதி குறித்து பேச்சு: பவன் கல்யாண் மீது அடுத்தடுத்து புகார்

அமைதி பூங்காவாக திகழ்ந்து வரும் தமிழகத்தில் பவன் கல்யாண் பேச்சு, ஆந்திர மாநில ஒரு தரப்பினரின் செயலால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Oct 10, 2024 - 16:46
உதயநிதி குறித்து பேச்சு: பவன் கல்யாண் மீது அடுத்தடுத்து புகார்
உதயநிதி குறித்து பேச்சு: பவன் கல்யாண் மீது அடுத்தடுத்து புகார்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை இழிவுப்படுத்திய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதியில் பேசியிருந்தார். மறைமுகமாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து இருந்தது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இரு தரப்பு ஆதரவாளர்களும் கருத்து மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் உச்சக்கட்டமாக ஆந்திராவில் உதயநிதி ஸ்டாலினை கண்டிக்கும் வகையிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் உதயநிதி ஸ்டாலின் படத்தின் மீது மிதித்து இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கொடுத்துள்ளார்.அந்த புகாரில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதியை பவன் கல்யாண் விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது.  பவன் கல்யாணின் இந்த செயல் ஆந்திர, தமிழக மக்களிடையே விரிசலை ஏற்படுத்தி, மோதலை தூண்டும் பேச்சாக அமைந்து இருக்கிறது. 

பவன் கல்யாணின் இந்த பேச்சை தொடர்ந்து, ஆந்திராவில் ஒரு தரப்பினர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து  ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் மீது சிலர் ஏறி நின்று இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடையும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர ஒரு தரப்பினரின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.அமைதி பூங்காவாக திகழ்ந்து வரும் தமிழகத்தில் பவன் கல்யாண் பேச்சு, ஆந்திர மாநில ஒரு தரப்பினரின் செயலால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக ஆந்திர மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்து இருக்கிறது. ஆகவே பவன் கல்யாண் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும்" என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow