மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து..! பதறிப்போய் காரில் இருந்து வெளியேறிய மேயர்... நடந்தது என்ன?
விபத்தில் நல்வாய்ப்பாக மேயர் பிரியா காயங்கள் இன்றி தப்பினார்
சென்னை மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இருக்கும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வேலூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்திற்கு சென்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவரின் இன்னோவா கார் பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் மேம்பாலத்தில் இருந்து இறங்கியபோது முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் அடித்து நின்றுள்ளது.
அப்போது, மேயர் பிரியாவின் காரின் வேகம் குறைக்கப்பட்ட நிலையில், பின்னால் வேகமாக வந்த லாரி, மேயர் காரின் பின்புறம் இடித்து தள்ளியதில் முன்னாள் சென்ற காரில் மோதி நின்றது. இதில் இரண்டு வாகனங்களுக்கு இடையே மேயர் பிரியாவின் கார் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக மேயர் பிரியா காயங்கள் இன்றி தப்பினார். ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காரில் இருந்து பதற்றத்துடன் மேயர் பிரியா இறங்கி சேதமடைந்த காரை பார்த்துள்ளார்.அப்போது பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள், நிகழ்விடத்திற்கு வந்து விபத்து குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேயர் பிரியா சிறிது நேரம் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே நின்ற நிலையில், அவ்வழியாக வந்த பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமிக்கு சொந்தமான காரில் ஏறி வீட்டிற்குச் சென்றார். இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்திற்குள்ளான லாரி மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?