எஸ்.பி.பி வாழ்ந்த தெருவுக்கு அவர் பெயரைச் சூட்டிய தமிழகஅரசு
மறைந்த பிரபல பின்னணிப் பாடகம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் தெருவுக்கு எஸ்.பி.பியின் பெயரைச் சூட்டியிருக்கிறது தமிழ்நாடு அரசு.
இந்தியத் திரையுலகில் வேறெந்தப் பாடகராலும் நிகர் செய்ய முடியாத பல சாதனைகளை நிகழ்த்தியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் வேறு பல இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படிப்பட்ட பாடல்களையும் பாடக்கூடிய கந்தர்வக் குரலுக்குச் சொந்தக்காரர். உலகெங்கிலும் கோடானு கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள எஸ்.பி.பி கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியன்று உயிரிழந்தார். அவரது நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்தியத் திரையுலகில் பெரும் சாதனையை நிகழ்த்திய எஸ்.பி.பியின் புகழைப் போற்றும் வகையில் அவர் இறுதி வரை வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் தெருவுக்கு எஸ்.பி.பியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தார் அவரது மகன் எஸ்.பி.பி.சரண்.
தமிழக அரசு இக்கோரிக்கையை ஏற்று நுங்கம்பாக்கம் காம்தார் வீதிக்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயர் சூட்டியிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில்,
“பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும் திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவருமான திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 2020ம் ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும் அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு, ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயரிடப்படும்.” எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் “அப்பாவின் நினைவு நாளை முன்னிட்டு அப்பா வசித்த வீடு இருக்கும் தெருவுக்கு, அவரது பெயர் வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க முயன்றேன். ஆனால் அவரது வேலைபழு காரணமாக அவரைச் சந்திக்க முடியவில்லை. ஆகவே, விளையாட்டுத்துறை அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து மனு அளித்தேன். மனு அளித்து அடுத்த 36 மணி நேரத்தில் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பொன்னான நேரத்தில் தகவல் துறை அமைச்சர் சாமிநாதன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருக்கும் இன்னும் குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆளும் அரசுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
What's Your Reaction?