“சிறையிலேயே ஃபவர்புல்லாக இருந்தவர் செந்தில் பாலாஜி” - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

சவுக்கு சங்கர் ஒரு காலத்தில் திமுக அரசுக்கு ஆதரவாக இருந்தவர்,  இன்று அவர் அரசை விமர்சித்தவுடன் தூக்கி குண்ட சட்டத்தில் போட்டு விடுகின்றனர்.

Sep 26, 2024 - 13:41
“சிறையிலேயே ஃபவர்புல்லாக இருந்தவர் செந்தில் பாலாஜி” - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

சிறையில் இருந்தபோதே ஃபவர்புல்லாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு மீண்டும் அதே முக்கியத்துவம் கொடுத்தால், அது சாட்சிகளை பாதிக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை இராமநாதபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், பாஜக எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்துள்ளது. என்னென்ன நிபந்தனைகள் என்பது எனக்கு தெரியாது.ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அதிமுக அரசில் அமைச்சராக இருந்தபோது பணம் வாங்கிக்கொண்டு வேலை அளித்தார் என்பதுதான் அவர் மீதான  குற்றச்சாட்டு. ஆயிரக்கணக்கான நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய குற்றச்சாட்டு என்பதால், இதில் அவர் முக்கியமான நபர். 

சாட்சிகள் பயப்படுவார்கள் என்பதால் தான் அவருக்கு ஜாமீன் கொடுக்காமல் இவ்வளவு நாட்களாக உள்ளே வைத்து இருந்தார்கள். இப்பொழுது உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வழக்கு விசாரணை நடத்த அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். திமுக அரசு குற்றம் சாட்டப்பட்ட நபர்களை ஒருபோதும் நியாயமான விசாரணைக்கு அனுமதித்ததில்லை. திமுக அரசு இந்த வழக்கை அதிகாரத்தை பயன்படுத்தி நீர்த்து போக வைக்காமல்,  வழக்கு தொடுத்தவர்ளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது எங்கள் எண்ணம்.
மேலும், செந்தில் பாலாஜி மீது என்னென்ன குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது என்பதை தற்போதைய முதலமைச்சரே பேசி இருக்கின்றார். தற்போது செந்தில் பாலாஜி தி.மு.கவுக்கு மாறி இருப்பதால்  அவர் மறந்திருக்கலாம், மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அதேபோல் மத்திய அரசை பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக எந்த அமைச்சர் மீதும் குற்றச்சாட்டுகள் இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது தமிழக அமைச்சர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்பதையும் மக்கள் முன்பு நியாபக படுத்துகிறோம். திமுக தலைவர், செந்தில் பாலாஜி மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் சொன்னாரோ, அதை தற்பொழுது ஞாபகப்படுத்துகிறோம்.
 
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் பிரதமரை சந்திக்கும் நேரத்தில் ஜாமின் கிடைத்து இருக்கிறது என்பது மாதிரியான கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. சமூக ஊடகத்தில் சிறு கருத்துக்கள் போடுவதற்கு கூட இந்த அரசு அதீத நடவடிக்கை எடுத்து இருக்கிறது. சவுக்கு சங்கர் ஒரு காலத்தில் திமுக அரசுக்கு ஆதரவாக இருந்தவர்,  இன்று அவர் அரசை விமர்சித்தவுடன் தூக்கி குண்ட சட்டத்தில் போட்டு விடுகின்றனர். எந்த அளவிற்கு இந்த அரசு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறது  என்பதை பார்க்கிறோம்.

செந்தில்பாலாஜி அரசின் முழு ஆதரவைப் பெற்ற, பவர்ஃபுல் அமைச்சராக இருந்தவர். இவர் உள்ளே இருந்தாலும் கூட கோவை மாநகராட்சியில் யார் மேயராக வேண்டும் என்பதை முடிவு செய்தார் என கூறப்படுகிறது. ஆகையால் மீண்டும் அதே போன்ற ஒரு முக்கியத்துவமோ, அதே செல்வாக்கு இருந்தால் அது சாட்சிகளை பாதிக்கும். முதலமைச்சர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஊழலுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என முதல்வர் சொல்வதை செயலில் காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow