அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்: துரைமுருகனுக்கு முன்னுரிமை- ஏன் தெரியுமா?

2009ம் ஆண்டு நடந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு துரைமுருகனுக்கு 2ம் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sep 30, 2024 - 20:54
அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்:  துரைமுருகனுக்கு முன்னுரிமை- ஏன் தெரியுமா?


தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதிக்கு 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனுக்கு 2வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

இவரைத்தொடர்ந்து, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக பொறுப்பேற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும், செந்தில் பாலாஜிக்கு 21வது இடமும், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு 27வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு  கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது,அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது வெளியான அமைச்சரவை பட்டியலில் முதலமைச்சருக்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பெயர் இருந்தது. மூத்த அமைச்சரான க.அன்பழகனுக்கு 3வது இடம் அளிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு தற்போது அமைச்சரவையில், மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு 2ம் இடமும், துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இடமும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow