வனவிலங்கு தாக்குதல் எதிரொலி.. டெல்லியில் கூடிய 17 மாநில விவசாயிகள்!

வனவிலங்குகளின் தாக்குதல்களால் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்காக தேசிய அளவில் மத்திய அரசு சட்டம் இயற்றக்கோரி 17 மாநில விவசாயிகள்- தோட்டத் தொழிலாளர்கள்- பழங்குடியின மற்றும் மீனவ பிரநிதிகள் ஒன்றாக இணைந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

வனவிலங்கு தாக்குதல் எதிரொலி.. டெல்லியில் கூடிய 17 மாநில விவசாயிகள்!
17 states demand central law for wildlife attack compensation

வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், மக்களின் உயிர்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்காக இந்திய அளவில் மத்திய அரசை உரிய சட்டத்தை இயற்றக்கோரி விவசாயிகள் - தோட்டத் தொழிலாளர்கள் - பழங்குடி  மக்கள் - மீனவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கோரிக்கை அமர்வு புதுடில்லியில் நடைபெற்றது.

நேற்றையத் தினம் (ஜூலை 22) புது டெல்லி, நாடாளுமன்றம் வளாகம் அருகே உள்ள கான்ஸ்டியூசன் கிளப் ஆப் இந்தியா அரங்கில் வனவிலங்குகளால் உயிர்கள் மற்றும் பயிர்கள் பாதிக்கப்படுவதற்கு உரிய இழப்பீடு வழங்குவதற்காக இந்திய அளவிலான சட்டத்தை மத்திய அரசை இயற்றக்கோரி 17 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் - தோட்டத் தொழிலாளர்கள் - பழங்குடி மக்கள் - மீனவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கோரிக்கை அமர்வு நடைபெற்றது.

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா, மத்திய பிரதேஷ், உத்தரபிரதேஷ், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, மேற்குவங்கம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள்:

இந்தக் கூட்டத்தில் பஞ்சாப் முன்னாள் முதல்வரும்- வேளாண் துறைக்கான நாடாளுமன்ற குழு தலைவருமான சரண்ஜித் சிங் சன்னி, வனத்துறைக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவரும்- கோட்டயம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் சார்ஜ், வனத்துறை நாடாளுமன்ற குழுவின் உறுப்பினரும் - திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ உள்ளிட்ட கேரளாவைச் சார்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 2 சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கேரள விவசாய சங்க தலைவர் P.T. ஜான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, விவசாயிகள் - தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் M.S. செல்வராஜ், தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு (KMM) மாநில ஒருங்கிணைப்பாளர் R. நந்தகுமார், கோவை மாவட்ட வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர் V.K.S.K செந்தில்குமார், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், கர்நாடகா ராஜ்ஜிய ரயத் சங்கத்தின் தலைவர் பசவராஜ், செயல்பாட்டாளர் அபூர்வா குல்கர்னி, மேற்கு வங்காளத்தில் இருந்து பவித்ர மண்டல்,  ஒடிசாவில் இருந்து அமுல்யா நாயக்,  உத்தரகாண்டில் இருந்து லலித் திவேதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாரதிய கிசான் யூனியனின் தேசிய ஒருங்கிணைப்பாளர்  யூத்வீர் சிங், SKM (NP) அபிமன்யு கோகார், கிசான் மஸ்தூர் மோர்ச்சாவிலிருந்து (KMM) குருணமித் சிங் மான்கட்,  ஒலிம்பிக் பதக்க வீரர் பஜ்ரங் புனியா, MSP கிசான் மோர்சாவின் தலைவர் V.M.சிங்,  ஹெரிடேஜ் ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி தலைவர் சுவாமி ஆத்ம நம்பி ஆகியோர் மத்திய அரசை சட்டத்தை இயற்றக்கோரி வலியுறுத்தி பேசினார்கள்.

தீர்மானம் நிறைவேற்றம்:

வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு கோருவதற்கான முதல் முயற்சியாக இந்த நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை, இமயமலை தொடர், வடகிழக்கு மாநிலங்கள், மத்திய இந்திய காடுகள் என குழுக்கள் பிரிக்கப்பட்டு உறுப்பினர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். 

தொடர்ச்சியாக குழுக்கள் வாரியாக இயங்கி உரிய சட்டத்தை கொண்டு வருவதற்கான தொடர் பணிகளை அனைவரும் இணைந்து பணியாற்றுவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு விரைந்து வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் - உயிர்களுக்கும் இழப்பீடு வழங்க உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென தீர்மானமும்  நிறைவேற்றப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow