அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர இதையெல்லாம் செய்யுங்க... - தமிழ்நாடு அரசு அறிவுரை!

கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Mar 15, 2024 - 22:12
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர இதையெல்லாம் செய்யுங்க... - தமிழ்நாடு அரசு அறிவுரை!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ளது.  

அதன்படி, 

* ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அரசு பள்ளிகளில் கட்டணம் பெறப்படாமல், தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது என்பதை எடுத்துரைத்து மாணவர்கள், சேர்க்கையை அதிகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

* மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, செய்தித் தாள்களில் செய்திகள் வெளியிட வேண்டும். 

* பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து ஆசிரியர்களையும் கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். 

* பள்ளி செல்லாக் குழந்தைகளின் பெற்றோர்களை கண்டறிந்து, அறிவுரைகள் வழங்கி அவர்களின் குழந்தைகளுடன் விழிப்புணர்வு பேரணியில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

* ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சிறப்பு கவனம் செலுத்தி மாணவர் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

* அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

* பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளையும் இடைநின்ற மாணவர்களையும் கண்டறிந்து, அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தனியார் பள்ளிகளுக்கு நிகரான இணையவழி பாட கற்பித்தல் பற்றியும் புலனக்குழு (Whatsapp Group) வழி ஆசிரியர் மாணவர் பாடப் பரிமாற்றங்கள் பற்றியும் பெற்றோர்களுக்கு விரிவாகவும் தெளிவாகவும் தெரிவித்தல் வேண்டும்.

* கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றவும் இந்தியாவிலேயே பள்ளி வயது அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்துவிட்டது தமிழ்நாடு என்று பெருமை அடையும் வகையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow