இன்று வெளுத்து வாங்கப் போகும் கனமழை... 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Sep 18, 2026 - 07:59
இன்று வெளுத்து வாங்கப் போகும் கனமழை... 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
rain alert

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 21-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், இயல்பான அளவிலேயே தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று (செப்.18) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

வளிமண்டல சுழற்சி காரணமாக, சுமார் 0.9 கி.மீ உயரத்தில் மராட்டிய மாநிலம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) உருவாகியுள்ளது.

இதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை நிலவரம்

செப்.18 முதல் செப்.21 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அந்தமான் கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

மேலும், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow