பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.5,000  கோடி சிறப்பு நிதி?...கல்வி அலுவலகங்களை வாடகை கட்டடத்திற்கு மாற்ற உத்தரவு...

Apr 3, 2024 - 21:00
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.5,000  கோடி சிறப்பு நிதி?...கல்வி அலுவலகங்களை வாடகை கட்டடத்திற்கு மாற்ற உத்தரவு...

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மாற்றியமைக்கும் வகையில் ரூ.5,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பள்ளி வளாகங்களில் செயல்படும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களை வாடகை கட்டடத்திற்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மரத்தடி வகுப்புகள் நடைபெறுவதை ஒழிக்கும் வகையில் புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என கடந்த 2022-2023 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2022-2023 நிதியாண்டில் ரூ.1,300 கோடியும், 2023-24 நிதியாண்டில் ரூ.1,500 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், நடப்பு 2024-2025 நிதியாண்டில் ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த கூடுதலாக ரூ.5,000 கோடி சிறப்பு நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி மூலம், பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்பட உள்ளன. 

இதனால், அரசுப் பள்ளி வளாகங்களில் இயங்கிவரும் 151 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களை உடனடியாக காலி செய்து வாடகை கட்டடங்களுக்கு மாற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow