33 ஆண்டுகளுக்குப் பின்... முருகன் உள்ளிட்ட மூவர் இலங்கை சென்றனர்...

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் தாயகம் சென்றனர்.

Apr 3, 2024 - 20:59
33 ஆண்டுகளுக்குப் பின்...  முருகன் உள்ளிட்ட மூவர் இலங்கை சென்றனர்...

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய மூவர் இலங்கை சென்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 1991 ஆண்டு மே 21 ஆம் தேதி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்த  இலங்கையை சேர்ந்த சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இருப்பினும் அவர்களை இலங்கைக்கு அனுப்புவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக  4 பேரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு முகாமில் இருந்த அவர்கள் 4 பேரும் தங்களை முகாமில் இருந்து விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதில் சாந்தனுக்கு இலங்கைக்கு செல்ல அனுமதி கிடைத்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி சாந்தன் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, தனது மகளுடன் லண்டனில் வசிக்க போவதாகவும், அதற்கு விசா எடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாளஅட்டை வழங்கக்கோரியும் முருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் விசா வழங்கப்பட்டு விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மூவரும் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, திருச்சி முகாமில் இருந்து காவல்துறையின் பாதுகாப்புடன் மூவரும் நேற்று (ஏப்ரல் 2) இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று ( ஏப்ரல் 3) காலை 10 மணிக்கு கொழும்பு செல்லும் விமானம் மூலம் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை சென்றனர். அவர்களை நளினி வழியனுப்பி வைத்தார்.

மூவரும் அப்போதைய காலகட்டத்தில்  சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா சென்றதன் காரணமாக விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மாலை 5.30 மணியளவில் வெளியேறி யாழ்ப்பாணம் சென்றடைந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow