ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்
தமிழக சபாநாயகர் அப்பாவு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் செந்தில் பாலாஜி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம், நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (75)உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை கடந்த மாதம் மோசமடைந்தது. மூச்சு திணறல் காரணமாக சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த மாத இறுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது. இதையடுத்து அவர் விரைந்து குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்கைக்கு திரும்ப வேண்டும் என, காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை (டிச.14) சுமார் 10.12 மணியளவில் காலமானார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ ஈவிகேஎஸ் இளங்கோவன் சில காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகத் துயரம் அடைந்தேன். இளங்கோவன் கட்சித் தொண்டர்களின் அன்பும் ஆதரவும் பெற்றுப் பரபரப்பாகக் கட்சிப் பணியாற்றியவர். அவர் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். காங்கிரஸ் கட்சிக்குச் சோதனை வந்த காலங்களில் உறுதியாக நின்றவர். அவர் நல்ல பேச்சாளர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் மறைவு காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு. அவருடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் மனப்பூர்வமான அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைவதாக” என தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழக சபாநாயகர் அப்பாவு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் செந்தில் பாலாஜி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம், நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?