”நீங்க தாமரைய வச்சுக்கோங்க, எனக்கு புலிய தாங்க”, மயிலாப்பூரில் சீமான் பேச்சு!
40 எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி கச்சத்தீவை மீட்டெடுப்பேன்- சீமான் பேச்சு
சென்னை மயிலாப்பூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட சீமான், பாஜக தாமரைச் சின்னத்தை வைத்துக் கொண்டிருப்பதைப் போல தமக்குப் புலிச் சின்னத்தை தேர்தல் ஆணையம் தர வேண்டும் என்று பேசினார்.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வியை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை செய்தார். அப்போது பேசிய சீமான், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் ஜாதி, குடிப்பெயர் கேட்கவில்லை ஆனால் எடப்பாடியிடம் ஜாதி கேட்கிறார்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அத்துடன் இதுபோன்ற கேள்விகளில் இருந்து தப்பி 13 வருடம் கட்சி நடத்தும் ஒரே ஆள் நான் மட்டும் தான் எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தேர்தலில் போட்டியிடவே ஆள் இல்லை என, என் கட்சியை விமர்சித்தவர்களுக்கு இன்று ஆள் இல்லை ஆனால், தான் 40 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளேன் என தெரிவித்தார். இதன்பின் 40 எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி கச்சத்தீவை மீட்டெடுப்பேன் எனவும் உறுதியளித்தார். அத்துடன் பெரியாரின் பேரன்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள் ஆனால் நாங்கள் தான் களத்தில் சாதிப்போம் எனவும் கூறினார்.
மத்தியில் ஆளும் பாஜகவினருக்கு மட்டும் எப்படி தேசிய பூவான தாமரை சின்னமாக வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பிய சீமான், நீங்கள் தாமரையை வைத்துக்கொள்ளுங்கள் அதேபோல எனக்கு தேசிய விலங்கான புலியை சின்னமாக கொடுத்துவிடுங்கள் என பேசினார். மேலும், அமைச்சர் உதயநிதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியை விமர்சித்த சீமான். கல்லை வைத்து உதயநிதி அரசியல் செய்வதாகவும், அந்த கல்லை முதலில் மதுரையில் வைத்தது அன்புமணி தான் எனக்கூறினார். அத்துடன் எடப்பாடி பழனிசாமியை திமுகவினர் தவழ்ந்துச்சென்று பதவியை பெற்றார் என விமர்சிக்கின்றனர். ஆனால் கருணாநிதி அண்ணா மறைந்த பின், எப்படி ஆட்சிக்கு வந்தார் என கேள்வி எழுப்பியதுடன், கருணாநிதி ஊழல் அமைச்சராக இருந்தார் எனவும் விமர்சனங்களை முன்வைத்தார்.
What's Your Reaction?