சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு.. பீனிக்ஸ் படத்தின் இயக்குநர் அனல் அரசு
”பீனிக்ஸ் படத்தினை சூர்யா விஜய் சேதுபதி படமாக மட்டும் பார்க்காமல், 28 இளைஞர்களின் வாழ்க்கையாக பாருங்கள்” என இயக்குநர் அனல் அரசு பேசியுள்ளார்.

இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்று ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பீனிக்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள சூர்யா விஜய் சேதுபதி பேசுகையில், "இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி. இந்தப் படத்தைப் பார்த்து பலர் பாராட்டினர். அனல் அரசு அவர்கள் என்னை தேர்வு செய்யவில்லை என்றால் இந்த இடத்தில் நான் இருந்திருக்க மாட்டேன். தயாரிப்பாளர் இந்தப் படம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்தார். படத்தில் நடித்த அனைவரும் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் சாம் சி.எஸ். பக்கபலமாக இருந்தனர். அனைவருக்கும் நன்றி" என பேசினார்.
தயாரிப்பாளர் ராஜலட்சுமி அனல் அரசு பேசுகையில்," 'ஃபீனிக்ஸ்' படத்தைத் தொடங்கும் போது ஒரு புதுமுகம் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். சினிமா எனக்கு புதிதுதான், ஆனால் சினிமாவில் இருப்பவர்கள் அனைவரும் எனக்கு சொல்லிக் கொடுத்தனர். என்னால் முடிந்த அனைத்தையும் இந்தப் படத்திற்கு கொடுத்துள்ளேன். சினிமாவில் உள்ள அனைவரும் கடினமாக உழைக்கின்றனர். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றியதற்கு, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
பீனிக்ஸ் படத்தின் இயக்குநர் அனல் அரசு பேசுகையில், "நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்த பிறகு இயக்குநராக முடிவு செய்தேன். இதற்கு உறுதுணையாக இருந்த ராஜலட்சுமி அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்தப் படத்திற்கு முக்கியமான தூணாக இருந்துள்ளார். சாம் சி.எஸ். இசை படத்திற்கு பக்கபலமாக இருந்தது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் அவர் பணியாற்ற ஒப்புக்கொண்டார், அவருக்கு மிகப்பெரிய நன்றி. எடிட்டர் ரூபன் அவர்களுக்கு நன்றி. இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாக வலுவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். நான் சாவின் விளிம்பு வரை சென்று பணியாற்றியுள்ளேன். 32 வருடங்களாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். இன்று ஒரு படத்தை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளேன். இந்தப் படத்தின் வெற்றி எனக்கு மட்டும் பயன் அளிக்காது. இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் பயனளிக்கும். அது ஒட்டுமொத்த சினிமாவிற்கும் நல்லது. இதை ஒரு சூர்யா விஜய் சேதுபதி படமாக மட்டும் பார்க்காமல், 28 இளைஞர்களின் வாழ்க்கையாக பாருங்கள். இந்தக் கதை சூர்யாவிற்கு எழுதியது இல்லை. ஆனால் சூர்யா இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அவருடைய கடின உழைப்பை கூடவே இருந்து பார்த்துள்ளேன். இந்த வயதில் அதிக உழைப்பைக் கொடுத்துள்ளார். சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
What's Your Reaction?






