விஜய் சேதுபதி தான் என்னுடைய ஆகாசவீரன்.. இயக்குநர் பாண்டிராஜ் பெருமிதம்
’தலைவன் தலைவி’ திரைப்படமானது, திரையில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் குமுதம் வாசகர்களுக்காக பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அன்றாட வாழ்க்கையில் கண்டு, கேட்ட விசயங்களை அழகு தன்மையோடு காட்சியாக்குபவர் இயக்குநர் பாண்டிராஜ். அவருடைய ‘பசங்க’ முதல் ‘எதற்கும் துணிந்தவன்’ வரை அனைத்து படங்களுமே கமர்ஷியல் தன்மையோடு இருக்கும். விஜய்சேதுபதி, நித்யா மேனனை வைத்து, பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘தலைவன் தலைவி’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் குமுதம் இதழுக்காக அவர் வழங்கிய பிரத்யேக நேர்காணலின் விவரம் பின்வருமாறு-
‘தலைவன் தலைவி’ எனும் சொல்லாடல் காதலுக்கான குறியீடு. உங்கள் படமும் காதலைத்தான் பேசுகிறதா?
‘‘இது காதல் படம்தான். டாம் அண்ட் ஜெர்ரி லவ் ஸ்டோரின்னும் சொல்லலாம். ஆனா, இது ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் நடக்கும் காதல். இதில் கல்யாணத்துக்கு முன்னால் நடக்கும் காதலும், கல்யாணத்துக்கு அப்புறமான காதலும் இருக்கும். அன்பும் இருக்கும் பிரச்னையும் இருக்கும். அந்தப் பிரச்னை சமாளிக்கப்படுவதும் இருக்கும். இப்போது விவாகரத்துகள் அதிகமாயிட்டே இருக்கு. அதற்குப் புரிதல் இல்லாத, ஈகோதான் முக்கியக் காரணம். இந்தப் படம் இப்போ காதலிச்சிட்டிருக்கிறவங்க பார்க்கக்கூடிய படமாகவும், இன்னைக்குள்ள டிரெண்டுக்கான படமாகவும் இருக்கும்.’’
விஜய்சேதுபதியுடன் இணைந்தது எப்படி?
‘‘விஜய்சேதுபதியும் நீங்களும் சேர்ற காம்பினேஷன் நல்லா இருக்கும்னு என் நண்பர்கள் சொல்வாங்க. சில தயாரிப்பாளர்களே விஜய்சேதுபதியோட ஒரு படம் பண்றீங்களான்னு கேட்டுருக்காங்க. ஒரு நடிகரா அவரை நான் ரொம்ப ரசிப்பேன். அவரும் என் படங்களைப் பாராட்டிப் பேசுவார். ‘தலைவன் தலைவி’ கதையை எழுதும்போதே, இதில் விஜய்சேதுபதி சார் நடிச்சா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. இதை கேமராமேன் சுகுமார்கிட்ட சொன்னேன். அவருக்கும் சரின்னு பட்டது. அவர்கிட்ட கதைசொல்ல சுகுமார் மூலம் கேட்டேன். அவரும் வரச் சொன்னார். கதையைச் சொல்லத் தொடங்கியதுமே ஆகாசவீரன், பேரரசி, பொற்செல்வன், அரசாங்கம், ராகவர்த்தினி, பொட்டு, ஆவர்ணம்னு கதாபாத்திரப் பெயர்களையும் சேர்த்துச் சொன்னேன். அப்பவே, ‘சார் இந்தப் பேர்களே அழகா இருக்கு. கதை ஆரம்பிக்கிற விதமே சூப்பரா இருக்கு. ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் பண்றேன். ஆகாச வீரனா வாழ்ந்து பார்க்க எனக்கு ஆசையா இருக்கிறது என்றார்.
இப்படித்தான் ரெண்டுபேரும் இணைந்தோம். அதுக்கப்புறம் சத்யஜோதி தியாகராஜன் சார், ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ மாதிரி எங்களுக்கு ஒரு படம் பண்ணுங்கன்னு பலமுறை சொல்லிகிட்டிருந்தார். எனவே, அங்கேயே ஒப்பந்தம் போட்டுவிட்டோம்.’’
விஜய்சேதுபதியுடன் பணியாற்றிய அனுபவங்கள்..?
‘‘அவர் ஓர் இனிப்பான, அன்பான மனிதர். அவர் கேட்கிற கேள்விகளும் அழகா இருக்கும். சேது சார் பிரமாதமா நடிப்பதைப் பார்க்கும்போது நம்ம ஆகாசவீரன் இவன்தான்கிற பெருமிதம் வந்தது. அவர் நடிப்பதைப் பார்த்து கைதட்டி ரசிச்சு வேலை செய்தோம். படம் முடிகிற நேரத்துல ‘ஏன் அதுக்குள்ள முடிக்கிறீங்க இன்னும் கொஞ்சநாள் ஷூட்டிங் போலாம்’னு சேது சாரும், நித்யா மேனனும் சொன்னாங்க. அவரோட வேலை செஞ்சது மறக்கமுடியாத நினைவுகளைத் தரக்கூடியதாகவும் இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
(கட்டுரையாளர்: அ.தமிழன்பன், குமுதம் , 16.07.2025)
What's Your Reaction?






