ஓடிடியில் வெளியானது சரிபோதா சனிவாரம்
தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை என்கிற பெயரில் வெளியான சரிபோதா சனிவாரம் என்கிற தெலுங்குப் படம் 5 மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார் நானி. தெலுங்கு சினிமாக்களின் வழக்கமான பாணியைத் தகர்த்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் பல வெற்றிகளையும் கண்டவர். தெலுங்குத் திரையுலகின் புதிய அலை என்றே நானியைச் சொல்ல முடியும். வேறுபட்ட கதைக்களத்திலும் அதே நேரம் அது கமர்ஷியலாகவும் வெற்றிபெறும் சூத்திரத்தை நன்கு அறிந்தவர் நானி.
நானியின் சமீபத்திய சில ஆண்டுகளில் நடித்த படங்களில் ‘ஷியாம் சிங்கா ராய்’ மற்றும் ‘அடடே சுந்தரா’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று வெற்றிப் படங்களாகின. அதன் பிறகு வெளியான ஹாய் நன்னா மற்றும் தசரா ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன என்றாலும் நானியின் மார்க்கெட்டைத் தூக்கிப் பிடித்தன. இறுதியாக வெளியான திரைப்படம்தான் சரிபோதா சனிவாரம். பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ள இத்திரைப்படம் சூர்யாவின் சனிக்கிழமை என்கிற பெயரில் தமிழில் வெளியானது.
நாயகன் சனிக்கிழமை மட்டும்தான் அடிப்பான் மற்ற நாட்களில் அடிக்க மாட்டான் இதுதான் அத்திரைப்படத்தின் ஒன்லைன். இந்த ஒன்லைனைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் எப்படியிருக்கும் என்கிற ஆவல் அனைவருக்கும் மேலெலும் விதமாக இருந்தது அதன் ஒன்லைன். இத்திரைப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றிப்படமானது. உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்து நானியின் திரை வாழ்க்கையில் மற்றுமொரு மைல் கல்லாய் அமைந்தது.
இத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளிலும் இன்று வெளியாகியிருக்கிறது.
What's Your Reaction?