Garudan Review: சொக்கனாக நடிப்பில் சொக்க வைத்தாரா சூரி..? கருடன் விமர்சனம் இதோ!
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கருடன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்து வருகிறது.
சென்னை: கோலிவுட்டில் காமெடியனாக வலம் வரும் சூரி கடந்தாண்டு முதல் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு ரிலீஸான விடுதலை படத்தில், விஜய் சேதுபதியுடன் லீடிங் ரோலில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், துரை செந்தில்குமார் இயக்கியுள்ள கருடன் படத்திலும் சூரி முதன்மையான பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோரும் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கருடன் டிவிட்டர் விமர்சனம்
துரை செந்தில்குமார் இயக்கியுள்ள கருடன் அதிக எதிர்பார்ப்புடன் இன்று வெளியான நிலையில், இப்படத்துக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. கதையின் படி சசிகுமாரும் உன்னி முகுந்தனும் நெருங்கிய நண்பர்கள். இவர்களில் உன்னி முகுந்தனின் விசுவாசியாக சொக்கன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் சூரி. திரைக்கதை முழுவதும் சூரியின் சொக்கன் கேரக்டரை பின்னணியாக வைத்து நகர்வதால், அவருக்கு நடிக்க நல்ல ஸ்பேஸ் கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சூரியும் சசியும் சூப்பராக நடித்துள்ளதோடு, உன்னி முகுந்தனின் கேரக்டரும் படத்திற்கு பலம் சேர்க்கிறது என ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
சூரிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து
அதேபோல் கருடன் படத்தில் விஷுவல், மேக்கிங், யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் தரமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கதை ஏற்கனவே பார்த்து பழகியதாக இருந்தாலும், திரைக்கதையில் ரசிகர்களை இயக்குநர் துரை செந்தில்குமார் கட்டிப் போட்டுவிட்டார் எனவும் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. ரூரல் ட்ராமா ஜானரில் சிறந்த படைப்பாக கருடன் உருவாகியுள்ளதாகவும் விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இதனிடையே கருடன் திரைப்படம் சூரிக்கு மிகப் பெரிய ஹிட்டாக அமைய வேண்டும் என சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார். அதில், “உங்கள் எண்ணத்திற்கும் உழைப்பிற்கும் கருடன் மிகப்பெரிய வெற்றி அடையட்டும் சூரி அண்ணன்” என குறிப்பிட்டு, படக்குழுவுக்கும் வாழ்த்துக் கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
நடிப்பில் மிரட்டும் சூரி
கருடன் படத்தில் சூரியின் பெர்ஃபாமன்ஸ் மிரட்டலாக உள்ளது என்றும், இன்டர்வெல் பிளாக் தரமான சம்பவமாக வந்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். சசிகுமார், உன்னி முகுந்தன் கேரக்டர் பவர்ஃபுல்லாக இருக்கிறது, திரைக்கதை, யுவனின் பின்னணி இசை கருடன் படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் சூரியின் கேரியரில் கருடன் திரைப்படம் மிகப் பெரிய சக்சஸ், அவரது ஹீரோயிசம் ஆக்டிங் சிலிர்க்க வைக்கிறது. இப்படியொரு நடிகர் இத்தனை வருடங்களாக காமெடியனாக நடித்து வந்தாரா என ஆச்சரியமாக உள்ளது என சினிமா சோஷியல் மீடியா ட்ராக்கர் ராஜசேகர் குறிப்பிட்டுள்ளார்.
கருடன் முதல் நாள் ஓபனிங்
கருடன் வெறித்தனமா இருக்கு, சாமி வந்து ஆடின மாதிரி தெறிக்கவிடுது சூரியின் நடிப்பு. இத ஸ்க்ரீன்ல பார்க்கும் போது கூஸ்பம்ஸ்ஸா இருக்கு. சசிகுமார், உன்னி முகுந்தன் கேரக்டரும் செம்ம என பாராட்டியுள்ளார் நெட்டிசன் ஒருவர். ஒட்டுமொத்தமாக கருடன் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. முக்கியமாக இந்தப் படத்தின் ஹீரோயின் சிவதாவின் நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 5 முதல் 6 காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், சிவதாவும் செம்மையாக ஸ்கோர் செய்துள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். இதனால் விடுதலையை தொடர்ந்து கருடனும் சூரியின் ஹீரோ அவதாரத்துக்கு பூஸ்ட்-அப் மொமண்ட்டாக அமைந்துள்ளது. அதேபோல், முதல் நாளில் கருடன் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால், பாக்ஸ் ஆபிஸிலும் சூரி மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?