“உன் தியாகம் பெரிது”- செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதற்கு முதலமைச்சர் வரவேற்பு

சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!

Sep 26, 2024 - 11:49
“உன் தியாகம் பெரிது”- செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதற்கு முதலமைச்சர் வரவேற்பு

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.மேலும் இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். மேலும் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், புழல் சிறைக்கு வெளியேயும், கரூரில் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியற்கு முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. 

அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். 

முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow