நடுக்கடலில் இலங்கைக் கடற்படை அட்டூழியம்... மீனவர்கள் இருவர் காயம்

இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்களிடம் ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Apr 9, 2024 - 09:17
நடுக்கடலில் இலங்கைக் கடற்படை அட்டூழியம்... மீனவர்கள் இருவர் காயம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் இருவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் பலத்த காயமடைந்த மீனவர்கள் சிகிச்சையில் உள்ளனர். 

ராமேஸ்வரம் அருகே கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படை சிறை பிடிப்பதும், தாக்குதல் நடத்துவதும், வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல படகு மற்றும் மீன்களைப் பறித்துக் கொண்டு அனுப்புவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தப் போக்கை தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், மீனவர்களுக்கான இந்த அச்சுறுத்தல் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணமே உள்ளது. 

நாகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்கடல் ஓரமுள்ள மீனவர்கள், இயற்கையோடு மட்டுமின்றி இலங்கை கடற்படையோடும் போராடி வாழ்வாதாரத்தைக் காத்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி அனுப்பியுள்ளனர். \

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, மெக்கான்ஸ், தங்கம் என்ற இரு மீனவர்கள் விசைப்படகு மூலம் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். அவர்களை நடுக்கடலில் மடக்கிய இலங்கைக் கடற்படையினர் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில் இருவருக்கும் தலை மற்றும் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அங்கிருந்து தப்பி, ராமேஸ்வரம் வந்த மீனவர்கள் அரசு மருத்துவமனையை நாடினர். அங்கு அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்ட நிலையில், இருவரும் வீடுகளின் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 

இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்களிடம், சம்பவம் தொடர்பாக ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இலங்கை கடற்படையின் இந்த அராஜகப் போக்கைக் கண்டிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow