"தீரன்" பட பாணியில் சிக்கி கொண்ட சென்னை போலீஸ்-போராடி நகைத் திருடன் கைது
கைது செய்யப்பட்ட சைபுல் ரஹ்மானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
"தீரன்" பட பாணியில் இந்திய எல்லை கிராமத்தில் சிக்கி கொண்ட சென்னை தனிப்படை போலீஸ் போராடி நகைத் திருடனை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் அருண்குமார். சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் குடும்பத்துடன் தங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாக தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.இவரது நகை பட்டறையில் ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 பேர் நகை செய்யும் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதங்களாக மேற்கு வங்கத்தை சேர்ந்த சைபுல் ரஹ்மான் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 7ஆம் தேதி சைபுல் ரகுமான் டீ குடிக்க வெளியே செல்வதாக தன்னுடன் வேலை செய்த சக ஊழியர்களிடம் தெரிவித்துவிட்டு சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் நகை பட்டறைக்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த நகை பட்டறை உரிமையாளர் அருண்குமார் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகத்தின் பேரில் பட்டறையில் இருந்த தங்க நகைகளை ஆய்வு செய்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த 162 கிராம் தங்க பார் கம்பிகள் (அதாவது சுமார் 20 சவரன் தங்கம்) திருடு போனது தெரியவந்தது.
உடனே நகை பட்டறை உரிமையாளர் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சைபுல் ரகுமான் பட்டறையில் இருந்து நகைகளை திருடி சென்றது உறுதியானது.இதனை அடுத்து நகைப்பட்டறை உரிமையாளர் அருண்குமார் இதுகுறித்து கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த திருட்டு வழக்கு சம்பந்தமாக கீழ்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
தனிப்படை போலீசாரின் விசாரணையில் நகை கொள்ளையில் ஈடுபட் மேற்கு வங்க மாநிலம் பலசார் மாவட்டம் காஞ்சாரா கிராமத்தைச் சேர்ந்த சைபுல் ரகுமான் விவரத்தையும் முதற்கட்டமாக சேகரித்தனர். சைபுல் ரகுமான் கடையில் வேலை செய்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சைபுல் ரகுமான் வித விதமான ஸ்டைலில் நகைகள் திருடுவதில் திறமையானவர்.
இதனை அடுத்து தலைமறைவான சைபுல் ரகுமான் எங்கு இருக்கிறார் என்பது தொடர்பான விசாரணையில் முதலாவதாக அவரது செல்போன் அழைப்புகள் மற்றும் நெட்வொர்க் சிக்னல் ஆகியவைகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர்.
விசாரணையில் சைபுல் ரகுமான் தனது சொந்த ஊரான மேற்கு வங்கம் மாநிலம் பலசார் மாவட்டம் காஞ்சாரா கிராமத்திற்கு சென்றிருப்பது தெரியவந்தது. அவரது ஊரானது மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து சாலை மார்க்கமாக பங்களாதேஷ் நாட்டைச் சென்றடையலாம். நாட்டின் எல்லை அருகில் இருக்கிறது. இது தனிப்படை போலீசருக்கு தெரியவந்தது.
தனிப்படை போலீசார் அந்த கிராமத்தில் முகாமிட்டு தேடி வந்தனர். சொந்த ஊரில் சைபுல் அவரது வீட்டில் இல்லாததை அடுத்து அவர் குறித்து விசாரணை செய்த போது அவருடைய மாமனார் வீடு உள்ள பகுதியான மேற்கு வங்கம் பிரகானா மாவட்டம் பங்கோன் கிராமத்தில் பதுங்கி இருந்த நிலையில் அங்கே சென்ற தனிப்படை போலீசார் சைபுல் ரஹ்மானை கைது செய்தனர். அப்போது "தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தில் வரும் காட்சிகளை போல கைது செய்யப்பட்ட நபரின் உறவினர்கள், கிராமத்தினர் தனிப்படை போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சைபுல் ரஹ்மானை கைது செய்ய விடாமல் தடுத்தனர்.
தனிப்படை போலீசார் உடனடியாக கீழ்பாக்கம் துணை காவல் ஆணையருக்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவித்ததை அடுத்து பிரகானா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்பாரிஷா நிலங்கி அவரின் உதவியை நாடினர். இந்த நிலையில், மேற்கு வங்க காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் உடனடியாக பிரகானா மாவட்டம் பங்கோன் கிராமத்திற்கு சென்று அங்கு கிராமத்தினர் மத்தியில் சிக்கி இருந்த சென்னை தனிப்படை போலீசாரை மீட்டனர்.
பிறகு கிராமத்தினரை சமாளித்து ஒரு வழியாக சென்னை தனிப்படை போலீசார் மற்றும் நகையைத் திருடிய குற்றவாளி சைபுல் ரகுமான் ஆகியோரை கிராமத்தின் அருகே இருந்த அமாடங்கா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.பின்பு சைபுல் ரகுமானின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அமடங்கா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திருடிய நகையை திருப்பி தருவதாகவும் கைது செய்யப்பட்டுள்ள சைபுல் ரகுமானை திருப்பி அனுப்பும் படியும் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அமடங்காக காவல் நிலையத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
அமடங்கா காவல் நிலைய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சைபுல் ரகுமானின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதன்பிறகு கைது செய்யப்பட்ட சைபுல் ரகுமான் பாதுகாப்பாக போலீசார் சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து 145 கிராம் (18.5 சவரன் )தங்க பார் கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்து மீட்டனர்.மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சைபுல் ரஹ்மான் சென்னை கீழ்ப்பாக்கம் மட்டுமின்றி ஹைதராபாத், சென்னை சவுகார்பேட்டை உள்ளிட்ட நகை பட்டறையிலும் கைவரிசை காட்டியிருப்பதும் அது குறித்த வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
மேலும் சைபுல் ரகுமான் நகை பட்டறைகளில் தங்க பார் கம்பிகளை கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர் என்பதும் குறிப்பாக யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் செருப்பில் பார் தங்க கம்பிகளை மறைத்து வைத்து திருடி சென்று தனது சொந்த மாநிலத்திற்கு தப்பிச் செல்வது வழக்கமாக வைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சைபுல் ரஹ்மானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். தீரன் அதிகாரம் படத்தில் வெளி மாநிலத்தில் தப்பிச்செல்லும் குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் தமிழ்நாடு போலீசாரின் வடமாநிலத்தில் சிக்கி கொள்வார்கள்.
அதேபோன்று சென்னை கீழ்பாக்கத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய சென்ற தனிப்படை போலீசார் வெளிமாநிலத்தில் சிக்கிக்கொண்ட நிலையில் பிறகு கைது செய்யப்பட்ட சைபுல் ரகுமான் பத்திரமாக சென்னை அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேட்டிருந்த உயர் அதிகாரிகள் மேற்குவங்க மாநிலத்திற்கு குற்றவாளியை கைது செய்ததற்கு தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.
What's Your Reaction?