பிரசாரத்திற்கு பொதுமக்களை திரட்டி பணப் பட்டுவாடா.. திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

Apr 10, 2024 - 18:43
பிரசாரத்திற்கு பொதுமக்களை திரட்டி பணப் பட்டுவாடா.. திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

மதுரை உச்சப்பட்டியில் பிரசாரத்திற்கு பொதுமக்களை திரட்டி திமுக - காங்கிரஸ் பணப் பட்டுவாடா செய்ததாக ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார்.  தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று (09-04-2024) விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட மதுரை உச்சப்பட்டியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பிரசாரத்திற்காக அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.100 வீதம் திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. ரூ.100 வாங்கிய பெண்களில் ஒருவர் "டீ காபி எல்லாம் கிடையாதா?" என கேட்டதற்கு மற்றொரு பெண் "டீ காபி கிடையாது. வேணும்னா பால் பாக்கெட் வாங்கிட்டு வந்து வீட்டில் போட்டு குடிச்சுக்க. இந்த நூறு ரூபாய வச்சி வீட்ல டீ போட்டு குடி" என்றும், "இன்னும் அந்த காலம் மாறி 50, 100 கொடுக்குறாங்க. ஆட்சிக்கு வந்து கோடி கோடியா அள்ளி திங்கிறாங்க. வேலைக்கு சென்றிருந்தாலும் 500 ரூபாய் கிடைத்திருக்கும். இங்கே இவ்வளவு நேரம் நிக்க வைத்து 100 ரூபாய் கொடுக்குறாங்க" என்றும் புலம்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக உச்சப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் காசி, ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எவ்வித அனுமதியும் இன்றி பிரசாரத்திற்கு பொதுமக்களை காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் திரட்டி வந்து, பணம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சட்டவிரோதமாக பொதுமக்களை பிரசாரத்திற்கு அழைத்து வந்து பணம் கொடுத்ததாக திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் மீது ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow