திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை - டி.கே.எஸ் இளங்கோவன்
திமுகவின் சாதனைகள் மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது.
திமுகவிற்கு எதிரிகள் எப்பொழுதுமே இருக்கிறவர்கள்தான் என டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய விஜய், கட்சியின் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசினார். மேலும் ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி, பாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள் என திமுகவை சாடினார். இதற்கு திமுக அமைச்சர்கள் பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குமுதம் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியளித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், திமுகவிற்கு எதிரிகள் எப்பொழுதுமே இருக்கிறவர்கள்தான். நாங்கள் ஆட்சியிலே இருக்கிற கட்சி. எங்கள் கூட்டணியில் இருக்கிறவர்கள் எங்களுடன் இணைந்து இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் ஆட்சியின் சாதனைகளை மக்கள் விரும்புகிறார்கள்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்களின் மூன்றாண்டு கால சாதனையை பார்த்து மக்கள் பெருவாரியான வாக்குகளை செலுத்தி வெற்றி பெற வைத்துள்ளனர். இதற்குக் காரணம் திமுகவின் சாதனைகள் மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது. மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர் என்றுதான் அர்த்தம். திமுகவின் மீது ஊழல் குற்றச்சாட்டு பல்வேறு காலத்தில் இருந்தே சொல்லப்பட்டுதான் வருகிறது. ஆனால் ஊழல் நடைபெற்றதாக எந்த ஆதாரமும் இல்லை. எந்த குற்றச்சாட்டும் இல்லை என தெரிவித்தார்.
What's Your Reaction?