ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது - விஜய்யை சீண்டிய ராம சீனிவாசன்
வசனகர்த்தா எழுதிக் கொடுத்த சினிமா பாணி வசனங்களை உங்கள் முன்னே டைரக்டரும் கேமராமேனும் இல்லாமலே சிறப்பாக பேசி நடித்திருக்கிறீர்கள்.
ஒரு நாள் மழைக்கே தமிழகச் சாலைகள் பல் இளிப்பது போல ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது என தவெக தலைவர் விஜய்யை ராம சீனிவாசன் சாடியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய விஜய், கட்சியின் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசினார்.
மேலும் ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி, பாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள் என திமுகவை சாடினார். இதற்கு திமுக அமைச்சர்கள் பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி என விஜய் தெரிவித்தார்.
இந்த நிலையில் விஜய் கருத்துக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் தவெக மாநாடு மற்றும் விஜய்யின் பேச்சு குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ஒரு நாள் மழைக்கே தமிழகச் சாலைகள் பல் இளிப்பது போல ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது. வசனகர்த்தா எழுதிக் கொடுத்த சினிமா பாணி வசனங்களை உங்கள் முன்னே டைரக்டரும் கேமராமேனும் இல்லாமலே சிறப்பாக பேசி நடித்திருக்கிறீர்கள். உங்கள் மாநாடு வெற்றிதான்... உங்கள் அரசியல் வெற்றி அடையாது என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?