மா.செக்களுக்கு திருமா போட்ட உத்தரவு... புதிய கோணத்தில் விசிக!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு, அக்கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பியுமான திருமாவளவன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மதுஒழிப்பு மாநாட்டிற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இன்னொருபக்கம் விசிக கூட்டணி குறித்து சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் போதை பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அக்கட்சியுடன் இணைந்தே மதுஒழிப்பு மாநாட்டை விசிக நடத்துவது அப்பட்டமான நாடகம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. மறுபக்கம் திமுகவை அச்சுறுத்தவும், விஜய்யுடன் கூட்டணி வைக்கவும் தான், விசிக சார்பில் இப்படி ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படியான ஒரு சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு திருமாவளவன் உத்தரவு ஒன்றை பிறத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் காணொளி வாயிலாக பங்கேற்றார். அப்போது சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டதோடு, கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு மிக முக்கியமான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
அதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டம், ஒன்றியம் மற்றும் நகர் பகுதிகளில் விசிகவின் மகளிர் விடுதலை இயக்க பொறுப்பாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். அதோடு, நடைபெறவுள்ள மது ஒழிப்பு மாநாட்டிற்கு மகளிர் அணி அனைவரும் சீருடை அணிந்து வருவதற்காக ஆயிரக்கணக்கான சீருடை புடவைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ரூபாய் 160 மதிப்புள்ள இந்த சீருடை புடவைகளை, மாவட்டச் செயலாளர்கள் உரிய விலைக் கொடுத்து வாங்கி மகளிர் விடுதலை இயக்க அணியினருக்கு இலவசமாக வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார். அவர்கள் அனைவரும் சீருடை புடவைகளை அணிந்துகொண்டே மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?